பீளமேட்டில் கருப்பு கொடி போராட்டம்

கோவை பீளமேடு ரயில்நிலையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 8 ஆண்டுகளாகியும் சுரங்கப்பாதை அமைக்காமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

கோவை பீளமேடு ரயில்நிலையம் அருகே கடந்த 2017-ல் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து பொதுமக்கள் செல்லும் நிலையுள்ளது. இப்படி செல்லும் போது ரயிலில் அடிப்பட்டு பொதுமக்கள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, உடனடியாக அந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பீளமேடு சப்வே போராட்ட குழுவினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேலம் ரயில்வே கோட்டத்தை கண்டித்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர் கோபால் கூறியதாவது: ரயில்வே சுரங்கப்பாதை இல்லாதகாரணத்தினால் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இதனால், தற்போது வரை 26 பேர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் சுரங்கப்பாதை அமைக்க நிலத்தை கையகப்படுத்தாமல் இருக்கிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், வருவாய் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. உயிரிழப்புகளை தடுக்க விரைந்து சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.

பீளமேடு ரயில்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே மேம்பாலம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *