பெண் பயணி மயக்கம்: பஸ்சில் மருத்துவமனை அழைத்து வந்து காப்பாற்றிய டிரைவர்…

கோவை தனியார் பஸ்சில் மயக்கமடைந்த பெண் பயணியை அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோபி செட்டிபாளையத்தில் இருந்து கோவை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்தது. இந்த பஸ்சை டிரைவர் லோகேஷ் ஓட்டினார். பஸ், பீளமேடு அருகே வந்த போது பஸ்சில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதனை பார்த்த மற்ற பயணிகள் கண்டக்டர் பிரகாஷ் மற்றும் டிரைவர் லோகேஷ் ஆகியோரிடம் தெரிவித்தனர்.

அப்போது, சற்றும் தாமதிக்காமல் டிரைவர் லோகேஷ், பஸ்சை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு இயக்கினார். நேரடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு பஸ்சை கொண்டு சென்றார். பின்னர், மருத்துவ பணியாளர்கள் மயக்கமடைந்த அந்த பெண் பயணியை மீட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உடல் நலம் சீரானது. இந்நிலையில், பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு சிறிதும் தாமதிக்காமல் பஸ்சை மருத்துவமனைக்கே இயக்கி உயிரை காப்பாற்றி உதவிய டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *