கோவை கேரளாவுக்கான ராசகேசரி பெருவழி பாதை…

கோவை மாவட்டத்தில் அழிந்து போன கால சுவடுகளில் ராச கேசரி பெருவழிச்சாலையும் ஒன்று.

வணிகர்கள், யாத்ரிகர்கள் பயன்படுத்திய அந்த காலத்து 7 நெம்பர் ரோடு’ தான் ராச கேசரி பெருவழி. 13ம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த பரகேசரி வழி வந்த மன்னர் ராசகேசரி அமைத்த ரோடாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கரூர் அருகே கொடுமணல் என்ற பகுதியில் இருந்து கோழிக்கோடு வரை ராசகேசரி பாதை நீண்டுள்ளது.

சுமார் 400 கி.மீ தூரத்திற்கு இந்த ரோடு இருந்துள்ளது. கொடுமணல், தாராபுரம், காங்கயம், மங்கலம், சூலூர், இருகூர், வெள்ளலூர், பேரூர், வாளையார் வழியாக இந்த பாதை சென்றுள்ளது. கொடுமணல், தாராபுரம், காங்கயம் போன்ற பகுதிகளில் ஊர் சந்தை இருந்துள்ளது. இங்கே தான் மிளகு, தானியங்கள் விற்கப்பட்டது. கடல் மார்க்கமாக பயணம் வந்த ஆங்கிலேயர்கள் குதிரை பயணத்தில் கோவை வந்து ஆட்சி நடத்தியுள்ளனர்.

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் ராசசேகரி பாதைக்கான சந்திப்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கோயில் கட்டிய பின்னர் இந்த பாதை இருந்த இடம் அழிந்து போய் விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 1971ம் ஆண்டில் கோவை தொல்லியல் துறையினர் முதல் முறையாக ராச கேசரி பாதையை அடையாளம் கண்டனர். கோவைப்புதூரில் இருந்து 4 கி.மீ தூரத்தில் அய்யாசாமி மலை உச்சியில் இந்த பாதைக்கான அடையாளம், ஒரு சுமை தாங்கி கல்லும், ராச சேகரி மன்னரை வாழ்த்தி எழுதப்பட்ட பாடலும் காணப்பட்டது.

இந்த பாதை 30 மீட்டர் தூரம் வரை மட்டுமே இருந்தது. இரண்டாவது முறையாக கடந்த 2002ம் ஆண்டில் தொல்லியல் துறையினர் மறு ஆய்வு நடத்திய போது காட்டாற்று வெள்ளத்தில் வரலாற்று பொக்கிஷ அடையாளங்கள் தடம் மாறியிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக பிராமி எழுத்தில் இருந்த வாழ்த்து பாடல் அழிந்து போனது.

கோவையில் இருந்து வாளையார் செல்ல 23 கி.மீ தூரம். ஆனால் ராசகேசரி பாதையில் 15 கி.மீ தூரத்தில் வாளையார் செல்ல பாதை இருந்தது. மதுக்கரை, எட்டிமலை, கந்தேகவுண்டன் சாவடியில் 9 மலைகளை குடைந்து பாதை அமைத்திருந்தனர். விலங்குகளிடம் இருந்து யாத்ரிகள் தப்பிக்க பாதை குகையும் இருந்துள்ளது. 5 அடி உயர சைஸ்கள் மூலமாக பாதை உருவாக்கப்பட்டிருந்தது.

யவனர்கள், யாத்ரிகர்கள் ஒய்வெடுக்க 5 முதல் 10 மைல் கல் தொலைவிற்கு சாவடியும், 1 கி.மீ தூரத்திற்கு ஒரு சுமை தாங்கி கல்லும் வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இவை கால போக்கில் அழிந்து விட்டதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். 100 ஆண்டுகளுக்கு முன் ராசகேசரிக்கு மாற்றாக புதிய ரோடு உருவாகியுள்ளது. தற்போது ராச சேகரியின் மாற்றுப்பாதையாக பாலக்காடு ரோடு (என்.எச்.47) உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *