தேசிய ஹாக்கி போட்டியில் ஒடிசா அணி சாம்பியன்…
தேசிய அளவில் 16வது ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி கோவை ஆர்எஸ் புரம் மாநகராட்சி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், டெல்லி உள்பட நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது. இன்று சாம்பியன் கோப்பைக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஒடிசா மற்றும் மத்தியபிரதேச அணிகள் மோதின.
வெற்றி பெற இறு அணிகளும் கடுமையாக போராடின. போட்டி ஆரம்பித்த 2வது நிமிடத்தில் ஒடிசா அணி வீரர் மந்தீப் கோல் அடித்தார். இதனால் ஒடிசா அணி முன்னிலை வகித்தது. பின்னர் மத்திய பிரதேச அணி வீர் சோஹைல் அலி 37வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இரு அணிளும் தலா 1 கோல் என இருந்தது.
சாம்பியன் கோப்பை வெல்ல இரு அணி வீரர்களும் போராடினர். இதில் 45வது நிமிடத்தில் ஒடிசா வீரர் தீபக் ஒரு கோல் அடித்தார். இதனால் ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது. முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்திற்கான போட்டியில் பஞ்சாப், ஜார்க்கண்ட் அணிகள் மோதின.
இதில் பஞ்சாப் அணி 6-3 என்ற கோல் கணக்கில் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவிதேஜா ஆகியோர் கலந்து கொண்டு பரிசு கோப்பை வழங்கினர்.
இதில் தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன், பொதுச்செயலாளர் செந்தில் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
