கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வள்ளலார் வீதியைச் சேர்ந்த கென்னடி மகன் அமுதன் (19). இவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பர்கள் சிலருடன் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கி உள்ள விடுதி அறைக்கு சென்றுள்ளனர். அனைவரும் முகமூடி அணிந்து கொண்டு கத்தியை காட்டி மிரட்டி நான்காம் ஆண்டு மாணவர்கள் வைத்திருந்த இரு கைபேசிகளை பறித்துக் கொண்டு தப்பினர்.

அவர்கள் துரத்தியபோது அமுதனின் முகமூடி லேசாக விலகியது. இதில் அவரது அடையாளத்தை மாணவர்கள் பார்த்துள்ளனர். மறுநாள் அதாவது திங்கள்கிழமை காலை கல்லூரி அருகே அமுதன் நின்று கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்த நான்காம் ஆண்டு மாணவர்கள் காரில் அவரை இழுத்துப் போட்டுக் கொண்டு கல்லூரியின் பின்பக்கம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து நான்கு மாணவர்கள் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை மீண்டும் கல்லூரி வாயில் முன் இறக்கி விட்டு விட்டு நான்காம் ஆண்டு மாணவர்கள் சென்றுவிட்டனர்.
அங்கிருந்து விடுதி அறைக்கு மாணவர் அமுதன் சென்றுள்ளார். சக மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சென்று விட்ட நிலையில் தாக்குதலில் பலத்த காயமடைந்த அமுதன் விடுதியிலேயே இருந்துள்ளார்.

மதியம் 1:30 மணி அளவில் விடுதிக்கு வந்து சக மாணவர்கள் பார்த்தபோது அசைவற்ற நிலையிலும் காயங்களுடனும் அமுதன் கிடப்பதை பார்த்தனர் .உடனடியாக எல் அண்ட் டி புறவழிச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இவரை தாக்கிய நான்கு மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் தாக்குதலில் மாணவர் ஒருவர் இறந்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

One thought on “கோவையில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *