கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் அபகரிப்பு: சர்வேயில் கண்டுபிடிப்பு
கோவை வனக்கோட்டம் 693 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது.
கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் காரமடை, மேட்டுப்பாளையம். சிறுமுகை வனசரங்கள் இருக்கிறது. இந்த பகுதிகளில் குறிப்பாக வன எல்லை விவசாய நிலங்கள் மற்றும் யானை வழித்தடங்கள் என அழைக்கப்படும் காரிடார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் சில இடங்களில் அத்துமீறல் இருப்பதாகவும் புகார் இருந்தது. இது தொடர்பாக தீவிர கள ஆய்வு நடத்த வேண்டும். என தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நில அளவை துறையினர் கடந்த சில மாதங்களாக யானை காரிடார் பகுதிகளில் சர்வே பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதுவரை 55 சதவீதம் நில அளவை பணிகள் முடிந்திருக்கிறது. இந்த பகுதிகளில் 120 இடங்களில் யானைகள் வழிதடங்கள் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. காம்பவுண்ட் சுவர் வேலி, பள்ளம், நீர் ஓடைகள் முடக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டது.
சில இடங்களில் அத்துமீறி விவசாயம், இதர தொழில்கள் நடப்பதாக சர்வே எண் மூலமாக உறுதி செய்யப்பட்டது.
இங்கே விரைவில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. யானை வழித்தடங்கள் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பகுதிகளில் யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக யானைகள் கடந்து செல்லும் பகுதிகளில் தொடர்ந்து பிரச்னை இருப்பதாக தெரிகிறது.
அங்கே வணிக வர்த்தக கல்வி நிறுவன கட்டடங்கள் உருவாகிவிட்டது. இருந்த போதிலும் யானைகள் தங்களது வருகையை அந்த பகுதியில் நிறுத்திக் கொள்ளவில்லை. யானை வழித்தடம் என அழைக்கப்படும் பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும். அந்த பகுதிகளில் அத்துமீறல்கள் தடுக்க வேண்டும். யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான மின் கம்பங்கள், உயர் கோபுர டவர், டிரான்ஸ்பார்மர், கட்டடங்கள் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களில் சர்வே பணி முடிந்து விடும். அதற்குப் பிறகு அத்துமீறல் அகற்றுதல் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் பணி நடத்தப்படும். யானைகள் தங்களது வாழிடங்களை எந்த தடையும் இல்லாமல் கடந்து செல்ல தேவையான வழிவகை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
