கோவை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கிடைக்கவில்லை எனக்கூறி முதியவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சூலூர் அருகேயுள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (65). இவர், தனது இடத்தை அளவீடு செய்து பட்டா வழங்கக்கோரி கடந்த 2021-ம் ஆண்டில் விண்ணப்பம் கொடுத்துள்ளார். சூலூர் தாலூகா அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருந்தார். ஆனால், இவருக்கு இதுவரை நிலம் அளந்து பட்டா வழங்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த இவர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்தார். அப்போதும் தீர்வு கிடைக்காத நிலையில் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார்.

கையில் அரளி விதையை அரைத்து எடுத்து வந்திருந்தார். போலீசார், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சோதனை செய்தபோது அவர்களது முன்னிலையில் விஷ விதையை சாப்பிட்டார். அதை விழுங்கியபடி தனது குறையை சொல்லி அழுதார். அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அவரது இடத்தை பார்வையிட்டு, அளவீடு செய்யும்படிம், பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதியவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்ணா போராட்டம்…

கோவை சுக்ரவார்பேட்டையை சேர்ந்த ராஜாராம் என்பவரது மனைவி மணி (7) நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். நுழைவு வாயிலில் பேனர் அமைத்து, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சென்னை ஐகோர்ட் உத்தரவை கோவை தெற்கு கோட்டாட்சியர் நிறைவேற்றவில்லை. 8 வார கால அவகாசம் வழங்கிய நிலையில் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக உத்தரவு வழங்கியுள்ளார். செல்வாக்கு பண பலம் மிக்க நிறுவனத்திற்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதுவும், பெரும் பரபரப்பை உருவாக்கியது.

One thought on “கோவை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *