கோவை கலெக்டர் அலுவலகத்தில் பத்திரம் பட்டா கேட்டு குவிந்த மக்கள்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், கணபதி மாநகர் வீட்டு உரிமையாளர்கள் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இவர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வருகை தந்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், “நாங்கள் 33 ஆண்டுகளுக்கு முன் இங்கே இடம் வாங்கி இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் கிரய பத்திரம் வழங்கவில்லை. கோர்ட் உத்தரவின்படி எங்களின் நிலத்திற்கு விலையை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். சட்ட விரோதமாக வசூலித்த தொகையை திரும்ப தர வேண்டும்.

எங்களின் கோரிக்கை இனியும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

அம்பேத்கர் மக்கள் விடுதலை கழக தலைவர் ரங்கநாதன் அளித்த மனுவில், “புலியகுளம் சவுரிபாளையம் செல்லும் ரோடு, பாலம் பழுதாகி கிடக்கிறது. இங்குள்ள கறிக்கடை அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இங்கே வேகத்தடை அமைக்க வேண்டும். விபத்து தடுக்க தேவையான வழிவகை செய்ய வேண்டும்” எனக்கூறியுள்ளார்.

தொண்டாமுத்தூர் அண்ணா நகர் பாலன் என்பவர் அளித்த மனுவில் “நான் வளர்த்த 30 ஆடுகள் கோமாரி நோய் காரணமாக இறந்து விட்டது. இதுதொடர்பாக ஆதாரங்களுடன் கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தேன். 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. எனக்கு இன்னும் நிவாரண உதவி கிடைக்கவில்லை. இதற்கு முன் இருந்த கலெக்டர் 5 ஆடுகள் இலவசமாக தருவதாக கூறினார். ஆனால், வழங்கவில்லை. பல முறை மனு கொடுத்து ஏமாந்து போய்விட்டேன்” என்றார்.

அன்னூர் கஞ்சப்பள்ளியை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மனைவி பஞ்சலிங்கம் (40) அளித்த மனுவில், “எனக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர், எனது கணவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார் முறையான ஆவணங்கள் இருந்தும் எனது குழந்தைகளுக்கு பிறப்பு சான்று கிடைக்கவில்லை. எனது மூத்த மகனுக்கு 12 வயது, இன்னொரு மகனுக்கு 9 வயது. பெண் குழந்தைகளுக்கு 6 வயது 3 வயது ஆகிறது. யாருக்கும் பிறப்பு சான்று, ஆதார் அட்டை கிடையாது. இதனால் பள்ளியில் சேர்க்க முடியவில்லை. அதிகாரிகள் உதவி செய்யவில்லை” என்றார்.

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் அளித்த மனுவில், “வெள்ளிங்கிரி மலை கோயில் வளாகத்தில் ஆவின் டீ கடை உணவகம் தேவை. பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் பஸ் விட வேண்டும். விழாக்காலங்களில் செம்மேடு, முட்டத்துகாடு, மடக்காடு, கோட்டைகாடு பகுதி வழியாக சுவாமி வீதியுலா நடத்த வேண்டும்“ எனக்கூறியுள்ளனர்.

சாலை விபத்தில் காலை இழந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் தண்டபாணி அளித்த மனுவில், “மாத சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எப், முழுமையான மருத்துவ நிவாரணம், வாழ்வாதார இழப்பீடு, நிரந்தர மாற்று வேலை வழங்க வேண்டும்” எனக்கூறியுள்ளார்.

இதேபோல், மேட்டுப்பாளையம் அன்னூர், சூலூர், ராமநாதபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 58 பேர் இலவச மனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கூட்டமாக குவிந்து விண்ணப்பம் மனுக்களை வழங்கினர் நேற்று ஒரே நாளில் 715 மனுக்கள் பெறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *