கோவை ஜி. எச் முன் வாகனங்களுக்கு அபராதம்

கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 4000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் 1200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை வளாகத்தில் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாத சூழல் இருக்கிறது. பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் குறிப்பாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்கள் மருத்துவமனை முன் ரோட்டோரம் நிறுத்தப்படுகிறது.

ஆனால், போலீசார் பஸ் ஸ்டாப்புக்கு பின்னால் உள்ள கட்டண பார்க்கிங் பகுதியில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். பொதுமக்கள் கட்டண வாகன நிறுத்தும் இடத்தை பயன்படுத்தாமல் ரோட்டோரம் நிறுத்தி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசார் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தொடர்ந்து அபராதம் விதித்து வருவதாக தெரிகிறது.

இது நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மிகவும் ஏழ்மையான நிலைமையில் இருக்கும் நோயாளிகள் தான் இங்கே வருகிறார்கள். அரசு மருத்துவமனை வளாகம் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இங்கே டாக்டர்கள் ஊழியர்கள் வாகனங்கள் மட்டும் நிற்பதற்கு அனுமதிக்கிறார்கள்.

மற்றவர்களின் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதில்லை. நோயாளிகள், பார்வையாளர்கள் வாகனம் நிறுத்த பார்க்கிங் வசதி செய்து தர மருத்துவமனை நிர்வாகத்தினர் முன் வர வேண்டும்.

மருத்துவமனையின் முன் தினமும் சுமார் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தெரிகிறது.

இந்த வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியை மருத்துவமனை வளாகத்தில் செய்து தர வேண்டும். குறிப்பாக, மருத்துவமனையில் நர்ஸ் குடியிருப்பு பகுதி அருகே பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கி தரவேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

One thought on “கோவை ஜி. எச் முன் வாகனங்களுக்கு அபராதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *