கோவையில் கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பு… தகர கூடாரங்கள் தரைமட்டம்…!
கோவை பீளமேடு நவ இந்தியா பகுதியில் தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணி நடந்து வருகிறது. 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கட்டுமான பணி நடந்து வரும் கட்டிடத்தின் சிறிது அருகில் பல இடங்களில் தகர செட் அமைந்து வசித்து வருகின்றனர். அவர்கள் கேஸ் சிலிண்டர் பாத்திரம் மற்றும் பல்வேறு பொருட்களை அந்த கூடாரங்களில் வைத்துள்ளனர்
தொழிலாளர்கள் அனைவரும் இன்று காலை பணிக்கு சென்றனர். அப்போது மதியம் 12 மணியளவில் 5 தொழிலாளர்கள் மட்டும் டீ போடுவதற்காக கூடாரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் டீ போட்டு கொண்டு இருந்த போது கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்தது . திடீரென அந்த கூடாரத்தில் தீ பிடித்துள்ளது. உடனே அவர்கள் அங்கிருந்த துணியை எடுத்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் தீ கட்டுக்குள் வராமல் துணியும் சேர்ந்து தீப்பிடித்தது. பயந்து போன தொழிலாளர்கள் உதவி கேட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் வந்தனர். ஆனால் அதற்குள் அங்கே இருந்த பத்துக்கு மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் வெடித்தது .
இதில் தகரக் கூடாரம் வெடித்து சிதற தொடங்கியது. மளமளவென தீ கூடாரம் முழுவதும் பரவி எரிய தொடங்கியாது. இதனால் அருகில் இருந்த கூடாரத்தில் இருந்தும் சிலிண்டர்கள் வெடிக்க தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த அங்கே இருந்த தொழிலாளர்கள் கோவை தெற்கு மற்றும் பீளமேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். பீளமேடு போலீசார் தடுப்புகள் அமைத்து அங்கிருந்தவர்களை வெளியேற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
4 வாகனங்களில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வடமாநில தொழிலாளர்களின் உடமைகள், பொருட்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கூடாரங்கள் தீயில் கருகி நாசமானது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாவட்ட அலுவலர் கணேசன் கூறுகையில், ‘தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். உயிரிழப்பு, காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. வெடிக்காத 30க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட சிவிண்டர்கள் வெடித்து சிதறி உள்ளது. தீவிபத்து முழுமையான கட்டுக்குள் கொண்டு வரபட்டுள்ளது’ என்றார்
இந்த தீவிபத்து குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
