காவலன் செயலி 45091 பேர் பதிவிறக்கம்…

மாநகரில் தனியாக வசிக்கும் முதியோர் பாதுகாப்பை உறுதிசெய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், 45,091 பேரை, எஸ்ஓஎஸ் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர்.

கோவை மாநகரில் தனியாக வசிக்கும் முதியோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மாநகர போலீசார் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநகரில் தனிமையில் வசிக்கும் 990 முதியோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களது முழுமையான விவரங்களை சேகரித்துள்ளனர்.

காவல்நிலையம் வாரியாக இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் முதியோர் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக காவலன் எஸ்ஓஎஸ்’ செயலியை தங்களது மொபைல் எண்களில் பதிவிறக்கம் செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் அவர்களது நடமாட்டம் மற்றும் இருப்பிடத்தை கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:

கோவை மாநகரில் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பல்வேறு இடங்களில் தனியாக வசிக்கும் 990 முதியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. தினமும் ரோந்து பணியின்போது போலீசார் இந்த வீடுகளை நேரில் சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும், முதியவர்களிடம் காவலன் எஸ்ஓஎஸ் செயலி குறித்து விளக்கி கூறப்பட்டு,

அதனை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துள்ள நபர்கள், ஆபத்தான நேரங்களில் போனை 3 முறை வேகமாக அசைத்தால் உடனே போலீசாருக்கு தகவல் சென்றுவிடும். உடனே ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு செல்வார்கள்.

அதேபோல் “பேனிக் பட்டன்” பொருத்த ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. வீட்டை சுற்றி ஏதாவது ஆபத்தான அறிகுறிகள் தெரிந்தால், அந்த “பேனிக் பட்டனை அழுத்தலாம்.

அந்த பேனிக் பட்டனுடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கரில் ஒலி எழும்பும். அந்த சத்தத்தை கேட்டு மர்ம் நபர்கள் அங்கிருந்து விலகி ஓடுவார்கள். மாநகரில் கடந்த 8 மாதத்தில் 45,091 பேரிடம் “காவலன் எஸ்ஓஎஸ்’ செயலி குறித்து விளக்கி, அதனை பதிவிறக்கம் செய்த வைத்துள்ளோம். இந்த தொழில்நுட்பம், போலீசாரின் கண்காணிப்பு பணிக்கு பெரிதும் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *