மலேசிய கேங்ஸ்டரை தப்பிக்க வைத்த கோவை போலீசார்…?!
மலேசியா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன் அவர்கள் பாலக்காடு வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். நவக்கரை அருகே வந்தபோது பெட்ரோல் பங்க் அருகே இரண்டு பேர் இருந்துள்ளனர் அவர்களுக்கும் மலேசியா சுற்றுலா வாகனத்தில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வேனில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு பேர் மதுக்கரை மார்க்கெட் தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது துப்பாக்கியால் சுட முயன்றனர். இதை முன்கூட்டி அறிந்த டிரைவர் வாகனத்தை சமாளிப்பாக ஓட்டி சென்றார். ஆனால் வாகனம் பள்ளத்தில் சாய்ந்தது.
இந்த நிலையில் பின் தொடர்ந்து வந்த நபர்கள் தங்களிடம் இருந்து அரிவாளால் மலேசியா சுற்றுலா பயணிகள் லோகநாதன் (53) மற்றும் யுகேந்திரன் (21) ஆகியோரை வெட்டி தப்பிச் சென்றனர். இது தொடர்பாக மதுக்கரை போலீசில் புகார் தரப்பட்டது .காயமடைந்த இரண்டு பேரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் கோவை
மாவட்ட எஸ்பி நேரடியாக இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். இதில் துப்பாக்கியால் சுட்ட நபர்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை . ஆனால் போலீஸ் சார்பில் தாக்குதல் மட்டுமே நடத்தப்பட்டது துப்பாக்கியால் சுடவில்லை என தெரிவிக்கப்பட்டது . மலேசியா சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டுக்கு செல்வதற்கு பல்வேறு பாதிப்பு ஏற்படும் என பயந்து போய் இந்த விவகாரம் தொடர்பாக புகார் தர மறுத்து விட்டனர்.
இருப்பினும் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
இதில் பல்வேறு திடுக்கிடும் விஷயங்கள் வெளியே வந்தது மலேசியா சுற்றுலா பயணிகள் வந்த வாகனத்தில் அந்த நாட்டைச் சேர்ந்த கேங்ஸ்டர் அமரன் என்பவர் இருந்துள்ளதாக தெரிகிறது .இவர் இந்தியா வரும் தகவல் அறிந்த இவரது எதிரிகள் கொலை செய்வதற்காக தமிழகத்தை சேர்ந்த சில கூலிப்படை ரவுடிகளை ஏவி இருப்பதாக கூறப்படுகிறது . ராமநாதபுரம் மதுரை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கூலிப்படையினர் கோவையில் முகாமிட்டு அமரன் குழுவினர் வருகைக்காக காத்திருந்தனர் .
அவரது வாகனம் வருவதை அறிந்து வழிமறித்து தாக்குதல் நடத்தினர். ஆனால் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாமல் அமரனை தாக்காமல் அந்த வாகனத்தில் இருந்த வாக்குவாதத்தில் ஈடுபட்ட லோகநாதன் மற்றும் யுகேந்திரனை அரிவாளால் வெட்டி துப்பாக்கியால் சுட முயன்றதாக தெரிகிறது. மதுக்கரை போலீசார் அவசர கதியில் விசாரணை நடத்தி மலேசியா சுற்றுலா பயணிகளை விமானத்தில் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர்கள் சென்ற பின்னர் தான் கோவை வந்திருந்தது கேங்ஸ்டர் அமரன் என்ற விவகாரம் தெரியவந்தது. சர்வதேச நாடுகள் தேடும் பெரிய ரவுடியை முறையாக விசாரிக்காமல் போலீசார் அனுப்பிவிட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டிய அரிவாளால் வெட்டிய கூலிப்படை கும்பலை கோவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
