ரூ.66.50 கோடி சர்வீஸ் ரோடு டெண்டர் முடக்கம்… ஒப்பந்ததாரர்கள் புகார்
கோவை மாவட்டத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் ரயில்வே கடவு பாலம் கட்டும் பணி நடக்கிறது.
இந்த நிலையில், இதே பகுதியில் 66.50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 800 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவருடன் சர்வீஸ் ரோடு அமைக்க கடந்த ஜூன் 29ம் தேதி டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த டெண்டர் விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திறக்கப்பட்டது. இதில் 14 ஒப்பந்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்று விலைப்புள்ளி விவரங்களை குறிப்பிட்டிருப்பது தெரியவந்தது. டெக்னிக்கல் பீட் விவரங்களை சரிபார்த்து எந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தருவது என இறுதி செய்யாமல் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தாமதம் செய்து வருவதாக தெரிகிறது.
ஒரு மாதம் கடந்தும், ஒப்பந்தங்களை அப்படியே கிடப்பில் போட்டது, ஏற்கனவே இந்த பகுதியில் சர்வீஸ் ரோடும் டெண்டர் வெளியிட 1 ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. நிதி ஒதுக்கீடு இல்லாமல் டெண்டர் விடப்படவில்லை. ரயில்வே கடவு பாலம் பணியும் 100 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டு ஆமை வேகத்தில் நடக்கிறது.
கோவை மார்க்கமாக கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதுக்கரை குரும்பபாளையம் ரோடு, மதுக்கரை மார்க்கெட் பைபாஸ் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. குறுகலான பாதையில் 4 கி.மீ தூரம் சுற்றி செல்ல வாகன ஓட்டிகள் 2 மணி நேரம் நெரிசலில் தினமும் திண்டாடி வருகிறார்கள்.
ரயில்வே கடவு பாலம் பணியின் தாமதம், மாற்று பாதையில் நெரிசல் காரணமாக மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நேரத்தில் சர்வீஸ் ரோடு பணியும் துவக்காமல் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டி வருகிறார்கள். 18 மாத காலத்தில் திட்ட பணிகள் முடிக்க வேண்டியுள்ளது. கடவு பாலம் பணி முடிவதற்குள் சர்வீஸ் ரோடு பணியை நடத்த முடிக்க ஒப்பந்த நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்கிறது.
ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் குறிப்பிட்ட சில தகுதியற்ற, உரிமம் புதுப்பிக்காத ஒப்பந்த நிறுவனங்களுக்கு சலுகை காட்ட, ஒப்பந்தம் ரத்து செய்து மறு டெண்டர் வெளியிடும் நோக்கத்தில் முடக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் எங்கேயும் ரோடு பாலம் பணிகள் நடக்கவில்லை.
ஒரே ஒரு திட்ட பணிக்கு டெண்டர் திறக்கப்பட்டும் இறுதி செய்யாமல் இழுபறியில் வைத்துள்ளனர். டெண்டர் முறைப்படி நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தரப்படும் என ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
