அம்மா உணவகத்தில் சேர் இல்லை… உட்கார்ந்து தான் சாப்பிடுறோம்…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் 30 பேர் சாப்பிடும் வகையில் டேபிள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த டேபிள் மீது தட்டு வைத்து நின்றபடி தான் சாப்பிட முடியும். மேலும் டேபிள் உயரமாக இருப்பதால், சிறுவர்களுக்கு எட்டுவதில்லை. வயதானவர்கள், நோயாளிகள் இந்த டேபிளில் நின்ற படி சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு நாற்காலி வசதி செய்யவில்லை.
இதனால் தரையில் அமர்ந்தபடி சாப்பிடும் நிலையிருக்கிறது. தரையில் உட்கார கூடாது என ஊழியர்கள் எச்சரிப்பதால், உணவு சாப்பிடுவோர் மேலும் தவிப்படைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தனர். ஆனால் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
உணவகத்தில் ஒரு புறம் அரிசி மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பேரல்களும் அதிகமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இட நெருக்கடியும் அதிகமாகி விட்டது.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், “நீண்ட வரிசையில் டேபிள், நாற்காலி இருந்தால் போதுமானது. ஆனால் உயர்தர கடைகளில் அமைக்கும் வகையில் டீ குடிக்கும் வகையிலான டேபிள் போட்டிருக்கிறார்கள். வயதானவர்கள், சிறுவர்கள், நோயாளிகள் எப்படி நின்றபடி சாப்பிட முடியும் என அதிகாரிகள் யோசிக்கவில்லை.
கால் முறிவு ஏற்பட்ட நோயாளி ஒருவர் சாப்பிட வந்து மிகவும் அவதிப்பட்டார். சிலர், நாற்காலி வசதி இல்லாததால் இங்கே வராமல் திரும்பி சென்று விட்டனர். தரமான உணவுடன், நாற்காலி வசதி செய்து தந்தால் உதவிகரமாக இருக்கும், ” என்றனர்.
