பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை…
கோவை பாரதியார் பல்கலையின் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் அதிகரித்துள்ள நிலையில், 17 நாடுகளை சேர்ந்த 65 வெளிநாட்டு மாணவர்கள் பல்கலையில் படித்து வருகின்றனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்போது 38 துறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்துறைகளில் பல்வேறு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் பல்வேறு படிப்புகளில் மொத்தம் 2,434 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில், 1,618 மாணவ, மாணவியர் பல்வேறு படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டில் 1,472 மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம். ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் சிறந்த கல்விச்சூழல் மீதான மாணவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும், முனைவர் பட்ட ஆராய்ச்சித்துறையிலும் பாரதியார் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 916 முனைவர் பட்ட (பிஎச்டி) ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்துள்ளனர். சர்வதேச அளவிலும் பாரதியார் பல்கலைக்கழகம் தனது கல்வி செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.
அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி 33 மாணவர்கள்,32 மாணவிகள் உள்பட 65 சர்வதேச மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் 19 துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை, தான்சானியா, மடகாஸ்கர், ஈராக், கென்யா, எத்தியோப்பியா,
சிரியா, மலேசியா உள்பட 17 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகின்றனர். தேசிய தரவரிசையில் 10-வது இடத்தை பெற்று பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது. மேலும், உலகளாவிய உயர்கல்வித் தரவரிசையில் இந்திய அளவில் 15-வது இடத்தை பிடித்துள்ளது.
இது குறித்து பல்கலையின் பதிவாளர் ராஜவேல் கூறுகையில்,”பாரதியார் பல்கலையில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இங்கு படிக்க ஆர்வம்காட்டி வருகின்றனர். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தரவரிசைகளில் பல்கலைக்கழகத்தின் நிலையை உயர்த்தவும், கல்வித்தரத்தை மேம்படுத்துதல், ஆராய்ச்சி வெளியீடுகளை அதிகரித்தல்,சர்வதேச ஒத்துழைப்புகளை வலுப்படுத்துதல்
மற்றும் மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து துறைத்தலைவர்கள்,பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் கூட்டு முயற்சியின் மூலம் பாரதியார் பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சர்வதேசத் தொடர்புகளில் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறது என்றார்.
