கோவையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது…

கோவையில் வீட்டு வரிக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்ட பில் கலெக்டரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை இடையர்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (25), கட்டிட காண்டிராக்டர். இவர் வெள்ளகிணறு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த புதிய வீட்டுக்கு வரி போட்டு கொடுக்க கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த பில் கலெக்டர் பிரதீப் குமார் (34) வீட்டு வரி தொடர்பாக பேச சந்தோஷை நேரில் வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ் வடக்கு மண்டல அலுவலகத்திற்கு சென்று பில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்தார். அப்போது பிரதீப் குமார், வீட்டு வரி போட்டு கொடுக்க சந்தோசிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ் இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் | புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் லஞ்சம் கேட்ட பில் கலெக்டர் பிரதீப்குமாரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று மாலை ரசாயனம் தடவிய பணத்தை சந்தோஷிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீசார் வடக்கு மண்டல அலுவலகம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனர். பில் கலெக்டர் பிரதீப், லஞ்ச பணத்தை பெற்ற போது வெளியே மறைந்திருந்த போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து பில் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *