கூரியரில் போதைப் பொருள் சப்ளை செய்யக்கூடாது… போலீசார் எச்சரிக்கை

போதை பொருள் கடத்தலை தடுக்க கூரியர் நிறுவனங்களுடன் ஆலோசனை கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில்

கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை தடுக்க கூரியர் நிறுவனங்களுடன் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

கோவை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை ஒழிக்க, மாவட்ட போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் கூரியர் நிறுவனங்கள், பார்சல் கையாளும் நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. கோவை மாவட்ட எஸ்.பி., பவன்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கஞ்சா, மெத்தாம்பெட்டமைன், மனநல பாதிப்பை ஏற்படுத்தும் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் மற்றும் பிற போதை பொருட்கள் கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மூலம் கடத்தப்படுவதை தடுக்க, போலீசாருக்கும், கூரியர் சேவை நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், பார்சல்களை ஏற்கும் முன், அனுப்புனரின் அடையாளம் மற்றும் தொடர்பு விவரங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். முழுமையற்ற முகவரி, தவறான கைபேசி எண் அல்லது சந்தேகத்திற்கிடமான விவரங்களுடன் பதிவு செய்யப்படும் பார்சல்களை கூடுதல் கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும்

அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது கல்லூரி மாணவர்கள் சார்பில் முழுமையற்ற விவரங்களுடன் அடிக்கடி அனுப்பப்படும் பார்சல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பணியாளர்கள் அனைவரும் சந்தேகத்திற்கிடமான பார்சல்கள், வழக்கத்திற்கு மாறான முன்பதிவு நடைமுறைகள் மற்றும் சந்தேகத்திற்குரிய வாடிக்கையாளர்களின் செயல்பாடுகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்

கஞ்சா, மெத்தாம்பெட்டமைன், மனநல பாதிப்பை ஏற்படுத்தும் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் அல்லது பிற போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பார்சல்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து, போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் எந்த ஊழியரும் ஈடுபடாதவாறு உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தெரிந்தே போதை பொருட்கள் கடத்துதல், கடத்தலுக்கு துணைபுரிதல், சட்டவிரோத போக்குவரத்துக்கு உதவுதல் அல்லது சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் ஆகியவை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *