டிஜிட்டல் அரெஸ்ட் என 1.53 கோடி ரூபாய் பறிப்பு

சேலத்தை சேர்ந்த 70 வயது தம்பதி கோவை மாநகரில் தனியார் காப்பக பராமரிப்பு குடியிருப்பில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது 2 மகள்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இவர்களின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளீர்கள் , இதனால் நாங்கள் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்ய இருக்கிறோம்.

எங்களின் அனுமதி இல்லாமல் நீங்கள் வீட்டை விட்டு செல்ல முடியாது செல்லக்கூடாது அப்படி வெளியே சென்றால் எங்களுக்கு தெரிந்துவிடும். எங்களது போலீசார் உங்களை ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள் . அப்படி நீங்கள் வெளியே சென்றால் உங்கள் மீது மேலும் வழக்கு அதிகரிக்கப்படும் என எச்சரித்தனர்.

பயந்து போன அந்த தம்பதி வீட்டிலேயே இருந்துள்ளனர். தொடர்ந்து அந்த மர்ம நபர்கள், அந்த தம்பதியிடம் உங்கள் வங்கி கணக்கை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதில் எவ்வளவு பணம் வைத்து உள்ளது என்று கேட்டு உள்ளனர். அதற்கு அவர்கள் நாங்கள் யாருக்கும் பணம் அனுப்பவில்லை என்றும், எங்களது வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 53 லட்சம் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

அதற்கு அந்த மர்ம நபர், நான் கூறும் வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை அனுப்பி வையுங்கள், நாங்கள் ஆய்வு செய்துவிட்டு, அந்த பணத்தை மீண்டும் உங்களுக்கு அனுப்பி வைத்து விடுவோம் என்றுள்ளனர். அதற்கு அந்த தம்பதி சேலம் வங்கி கிளையில் தான் பணம் உள்ளது, அங்கு சென்றால் தான் பணம் அனுப்ப முடியும் என்றனர்.

அதற்கு, அந்த மர்ம நபர்கள் நாங்கள் உங்களை கண்காணித்து கொண்டு இருப்போம், சேலம் சென்று பணத்தை அனுப்புங்கள், வேறு யாரிடமும் பேச கூடாது என்றுள்ளனர். இதையடுத்து அந்த தம்பதி சேலம் சென்று 2 தவணைகளாக ரூ.1 கோடியே 53 லட்சத்தை அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர் வெகு நாட்களாகியும் பணம் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அந்த தம்பதி தனது மகள்களிடம் விவரத்தை தெரிவித்துள்ளனர்.

அப்போது, அவர்கள் மோசடி கும்பல் உடனே போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளிக்கும்படி கூறினர். இதையடுத்து தம்பதி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மோசடி தொகை ரூ.1 கோடிக்கு மேல் இருந்ததால் வழக்கை சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றினர். அவர்கள் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *