டெங்கு கொசுக்களை அழிக்க 12 லட்சம் பொருட்களை அகற்ற கோவை மாநகராட்சி திட்டம்…

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலத்தை முன்னிட்டு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சிகளில் உள்ள மத்திய கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய மண்டல பகுதிகளில் வார்டு, வாரியாக ஆய்வு செய்யப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

சில வீடுகள், குடோன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தேவையற்ற பொருட்களை குவித்து வைத்திருப்பதன் மூலமும், டயர், சிரட்டை ஆகியவற்றில் நீர் தேங்குவதால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் கோவை மாநகராட்சியில் வார்டு வாரியாக வீடு தோறும் சென்று களப்பணி செய்து வருகின்றனர்.

பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒரு புதுமை முயற்சியாக ஐபிஎல் கிரிக்கெட் பாணியில், டெங்கு பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டிகள் தூய்மைப்பணியாளர்களுக்கு நடத்த உள்ளது. இதில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பழைய பொருட்களான சிரட்டை, டயர்கள், பழைய பொருட்கள் சேகரிக்க 5 மண்டலங்களுக்கு இடையே தூய்மை போட்டி நடத்தப்படும்.

இதில், கடந்த வாரம் முன்னோட்ட போட்டி நடந்தது. இதில் வடக்கு, மேற்கு மண்டலங்களுக்கு இடையே நடந்த போட்டியில் மேற்கு மண்டல தூய்மை பணியாளர்கள் 40,072 பொருட்களை அகற்றி வெற்றி பெற்றனர். வடக்கு மண்டல தூய்மை பணியாளர்கள் 33,759 டயர், சிரட்டை, பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி இருந்தனர்.

மத்திய கிழக்கு மண்டலங்கள் இடையே நடந்த முன்னோட்ட போட்டியில் மத்திய மண்டல பணியாளர்கள் 1,48,000 பொருட்களையும், கிழக்கு மண்டல பணியாளர்கள் 1,53,452 பொருட்களையும் அகற்றினர். முன்னோட்ட போட்டிகளில் மட்டும் சுமார் 5 லட்சம் பொருட்கள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: டிபிஎல் (டெங்கு பிரீமியர் லீக்) போட்டி இன்று முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. 9ம் தேதி மட்டும் போட்டி இல்லை. இதில், 5 மண்டலங்களுக்கு இடையே தூய்மைப்பணியாளர்களுக்கு 10 நாட்கள் போட்டி நடத்தப்படும். இவர்கள் டெங்கு கொசு பரவ காரணமாக உள்ள நீர் தேங்க கூடிய டயர், சிரட்டை, டப்பா உள்ளிட்ட பொருட்களை அகற்ற வேண்டும்.

அதிக பொருட்களை அகற்றும் மண்டலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இன்று நடைபெறும் முதல் போட்டியில் வடக்கு மண்டல தூய்மை பணியாளர்கள் மற்றும் கிழக்கு மண்டல தூய்மை பணியாளர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட உள்ளது. டெங்கு இல்லாத கோவையை உருவாக்க வேண்டும் என்பதோடு, டெங்கு கொசுவை ஒழிக்கும் நோக்கில் 12 லட்சம் பொருட்களை அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

அதிக பொருட்களை அகற்றும் அணிக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்படும். தங்கள் அணியை சிறப்பாக வழி நடத்தும் சுகாதார ஆய்வாளருக்கு ‘மேன் ஆப் தி சீரிஸ்’ வழங்கப்படும். இந்த டெங்கு (ஏடிஸ்) கொசு ஒழிப்பு நடவடிக்கை மூலம் ஒரு சில மாதங்களில் டெங்கு காய்ச்சல் இல்லாத கோவையை உருவாக்க முடியும்.

One thought on “டெங்கு கொசுக்களை அழிக்க 12 லட்சம் பொருட்களை அகற்ற கோவை மாநகராட்சி திட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *