சூலூரில் 5 லட்ச ரூபாய் மதிப்பில் போதை மாத்திரைகள் பறிமுதல்…!

கோவை மாவட்டம் சூலூரில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணி புதூர் பகுதியில் நேற்று இரவு சூலூர் எஸ்ஐ யுவராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆம்னி பேருந்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் அதிக அளவில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அந்த பகுதியில் வந்த கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர்.

அதில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைப்பையுடன் சூலூர் காவல் நிலையம். அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கோவை மாவட்டம் செளரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் மணிகண்டன் ( 29) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மகன் விஷ்ணு பிரபு ( 18 ) என தெரிய வந்தது. மணிகண்டன் சிப்ஸ் கடையில் வேலை செய்து வருவதாகவும், விஷ்ணு பிரபு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் 1200 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு கிலோ கஞ்சா ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில வாலிபர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த சூலூர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

One thought on “சூலூரில் 5 லட்ச ரூபாய் மதிப்பில் போதை மாத்திரைகள் பறிமுதல்…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *