face recognising: மாறு வேடத்தில் சுற்றும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்…
face recognition system மூலமாக கைதான கார்த்திக்…
கோவை நகர், புறநகரில் மாறு வேடத்தில் சுற்றும் குற்றவாளிகளை பேஸ் ரெககனிஷன் முறையில் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை நகர், புறநகரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்ட நபர்கள் பலர் ஜாமீனில் வருகின்றனர். சிலர் மீண்டும் போலீசில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாகி விடுவார்கள். திருட்டு, கொலை, போதை பொருள் கடத்தல் போன்ற வழக்குகளில் போலீஸாரால் தேடப்படும் நபர்கள் சிலர் சிக்காமல் இருக்க தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது.
சில குற்றவாளிகள் தங்களது முக அடையாளம் மற்றும் தோற்றங்களை மாற்றி சுற்றுகிறார்கள். சிலர் மன நோயாளி, பிச்சைகாரர், சாமியார் போல் நடித்து கோவை நகரில் வலம் வருவதாக தெரிகிறது. பஸ் ஸ்டாண்ட், பிளாட்பாரங்களில் சிலர் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் காட்டூரில் போதை பொருள் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மருதமலை அடிவாரத்தில் சாமியார் வேடத்தில் தலை மறைவாக இருந்தபோது சிக்கினார்.
அவரிடம் விசாரித்த போது போலீசார் தேடுவதால் இப்படி மாறி விட்டேன். என்னை பல ஆண்டாக பிடிக்கவில்லை எனக்கூறியுள்ளார். கடந்த வாரம் பேரூரில் கடந்த 2017ம் ஆண்டு கமலம் (70) என்ற மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த கார்த்திக் (32) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் சாமியார் போல் பெரிய தாடி வளர்த்து யாரும் அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்தார்.
இவர் சாமியார் தோற்றத்தில் கோயிலில் அன்னதானம் சாப்பிட்டு ஜாலியாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இவரை பேரூர் போலீசார் கைது செய்து விசாரித்த போது இதே தாடியுடன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்கு பல முறை வந்து சென்றுள்ளதாக கூறி அதிர வைத்தார்.
இவரை போல் பல குற்றவாளிகள் கோயில் வழிபாட்டு தலங்கள், பஸ் ஸ்டாண்ட் என பல இடங்களில் சுற்றுவதாக தெரிகிறது. இவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். பேஸ் ரெககனிஷன் சிஸ்டம் (முக அடையாளம் கண்டறிதல்) செயலி மூலமாக குற்றவாளிகள் குற்றம் செய்த காலத்தில் எடுத்த போட்டோ, விரல் ரேகை ஆதாரம் வைத்து உள்ளீடு செய்து குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சி எடுத்துள்ளனர். சாதாரண குற்றவாளிகள், திருட்டு, கொள்ளை வழக்கு, கொலை வழக்கு, விபத்து, மோசடி, பாலியல் வழக்கு என தனித்தனியாக குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வாகன சோதனை நடத்தும் போது குற்றவாளிகளின் முகத்தை பதிவு செய்து அதை பேஸ் ரெககனிஷன் சிஸ்டம் மூலமாக குற்ற செயல்களில் ஈடுபட்டவரா என உறுதி செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாநில அளவில் தலைமறை நபர்களையும் இந்த திட்டத்தில் தீவிரமாக தேடி வருகிறார்கள். சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலீசார் இந்த திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
