அவிநாசி ரோடு மேம்பாலம்: வாஹன் வெப்சைட்டில் விதிமுறை மீறல்களுக்கு அபராதம் போட தடை…
கோவை அவினாசி ரோட்டில் ஏஐ கேமராவில் பதிவாகும் வாகன விதிமீறல்களுக்கு மத்திய அரசின் வாகன் வெப்சைட் தளத்தில் அபராதம் விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1791 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் செவ்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சிலர் வாகனங்களில் வீலிங், பயர் டிரைவிங் போன்ற சாகசத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. அதி வேகமாக வாகனங்கள் செல்வதும் போக்குவரத்து விதிமுறை மீறல் நடப்பதும் அடிக்கடி அதிகமாகி விட்டது.
இதை தடுக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் பிரிவு சார்பில் ஏஐ கண்காணிப்பு கேமரா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 3 கோடி ரூபாய் செலவில் இந்த கேமரா அமைக்கப்பட்டது. மேம்பாலம் சந்திப்பு பகுதிகளான கோல்டு வின்ஸ் மற்றும் உப்பிலிபாளையம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இது தவிர அண்ணா சிலை நவ இந்தியா, பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, ஹோப் காலேஜ், கொடிசியா என எட்டு இடங்களில் உள்ள ஏறு இறங்கு தளங்கள் அபாய வளைவுகள் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 44 ஏஐ கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கேமராக்களில் தினமும் காட்சி பதிவுகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. வாகனங்கள் விதிமுறை மீறல் தொடர்பாக டிஸ்ப்ளே பகுதியில் காண்பிக்கப்படுகிறது ஆனால் இதுவரை எந்த வாகனத்திற்கும் அபராதம் விதிக்கப்படவில்லை. இந்த கேமராக்கள் அனைத்தும் மத்திய அரசின் போக்குவரத்து துறை வாகன் சாப்ட்வேர் உடன் இணைக்கப்பட்டு அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மத்திய அரசின் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு வாகன வெப்சைட் மூலமாக அபராதம் விதிக்க மறுத்து விட்டது. மேலும் இதற்கான அனுமதி உத்தரவையும் நிராகரித்து விட்டது. கோவையில் பல இடங்களில் வாகன விதி மீறல் நடக்கிறது. கண்காணிப்பு கேமரா இருக்கிறது. அங்கே அபராதம் விதிக்க கேட்காமல் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கேட்பது ஏன் என மத்திய அரசு கேள்வி கேட்டு அபராதம் விதிப்பு திட்டத்திற்கு மறுத்து விட்டதாக தெரிகிறது. எனவே பல கோடி ரூபாய் செலவில் ஏஐ கேமரா அமைத்த நெடுஞ்சாலைத்துறையினர் தவிப்படைந்துள்ளனர். மேலும் இந்த கேமரா காட்சிகளை கோவை மாநகர போலீஸ் கட்டுபாட்டு அறையில் இணைத்து கண்காணித்து ஓவர் ஸ்பீடு, போக்குவரத்து விதிமீறல் போன்றவற்றிக்கு அபராதம் விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேமரா அமைத்து 2 மாதங்களாகியும் அபராத திட்டத்தில் நிலவும் குழப்பத்தால் யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை. போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள், “10 கி.மீ தூரத்தை தினமும் சுமார் 80 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்துகிறது. எனவே அபராத திட்டத்தை கட்டாயம் நிறைவேற்ற போகிறோம் என தெரிவித்தனர்.
