டாஸ்மாக்கில் அசுத்தம்: சரி பண்ணாம அலட்சியம்…

கோவை மாவட்டத்தில் 229 டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் ‘பார்’கள் உள்ளன.

இந்த கடைகள், ‘பார்’கள் உள்ள பகுதிகளில் அசுத்தம் அதிகமாகி விட்டது. குப்பை, மது பாட்டில், உணவு பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை அகற்றாமல் குப்பையோடு குப்பையாக ‘பார்’களை நடத்தி வருகிறார்கள். மேலும் சிலர், போதை ஏறி, சாலையோரம் மற்றும் ‘பார்’ வளாகங்களில் கிடக்கிறார்கள், அசுத்த சூழலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘பார்’களில் சுகாதார சீர்கேட்டுன் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பொருட்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. குடிநீர் பாட்டில்கள் 3 மடங்கு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், டாஸ்மாக் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பல கடைகளில், 10 ரூபாய் ஸ்டிக்கர் கொடுத்து ஒட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஒருசில கடைகளில் ஸ்டிக்கர் இல்லாமல் விற்பனை செய்கிறார்கள்.

‘பார்’களில் நடக்ககூட இடமின்றி மூட்டை மூட்டையாக பாட்டில்களை குவித்து வைப்பதால் ஆல்கஹால் நெடி அதிகமாக இருப்பதாக குடிமகன்கள் கூறுகின்றனர். சில இடங்களில் தகர கூரை, ஓட்டு கொட்டகைகளில் ‘பார்’, கடைகள் இருக்கிறது. இந்த பகுதிகளில் தீ அபாயம் இருந்தும் எந்த பாதுகாப்பு வசதியும் செய்யவில்லை.

தவெக அரசு பொறுப்பேற்ற பின்னர் ‘பார்’, கடைகளில் சுகாதாரத்தை மேம்படுத்த எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. கடந்த காலங்களைவிட அவலமான நிலையில் மதுபான கடை, கூடங்கள் இருப்பதால் நோய் பரவல் அதிகமாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மதுபான ‘பார்’களில் குடிப்பவர்களைவிட, பொதுஇடங்களில் மது குடிப்போர் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டது. பெண்கள், சிறார்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது பானம் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *