கோவை அரசு மருத்துவமனையில் மரம் விழுந்த 6 கார்கள் சேதம்…
: கோவையில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலையில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்தது.
இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது கோவை அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவு கட்டிடம் அருகே 60 வருட வேப்பமரம் உள்ளது. இந்த மரம் இருக்கும் பகுதியில் சிலைகள் வைத்து சிலர் பூஜை செய்து வந்தனர். மேலும் மரத்தின் அருகே ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர்கள் மற்றும் சிலர் கார்களை நிறுத்தி வைத்திருந்தனர். காலை அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் வேப்பமரம் வேரோடு சாய்ந்து கார்கள் மீது விழுந்தது.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில கார்கள் மரத்திற்கு அடியில் சிக்கிக்கொண்டது. கார்களின் கண்ணாடிகள் மற்றும் மேல் பகுதி சேதம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனை அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.
மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டிருந்த கார்களை மீட்டனர். இதில் 6 கார்களின் கண்ணாடி மற்றும் முன்பகுதி, மேற்பகுதி முற்றிலுமாக சேதடைந்தன. மரம் சாய்ந்து விழுந்தபோது ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
மழையால் மேட்டுப்பாளையம் ரோடு வடகோவை மேம்பாலம் அருகே பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டது. சாக்கடை நீர் சப்வேயில் 3 இடங்களில் அருவி போல் பாய்ந்தது. இந்த தண்ணீர் வாகன ஓட்டிகளின் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். அண்ணா மார்க்கெட், எம்ஜிஆர் மார்க்கெட் மழையால் சக்தி காடாக மாறியது. பொதுமக்கள் மார்க்கெட்டிற்கு சென்று வர முடியாமல் அவதிப்பட்டனர். நகரில் பல இடங்களில் மழை நீருடன் சாக்கடை நீர் தேங்கியது. இதை மாநகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
