இன்ஸ்டாவில் பெண்ணுக்கு டார்ச்சர்… வாலிபருக்கு குத்து…!
கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் ஜெம் நகரில் ஒரு பியூட்டி பார்லர் உள்ளது. இங்கே நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த பினோ கோனாயக் (23) என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவர், ஆவாரம்பாளையம் ரோட்டில் நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்பாம் (22). இவர், வெங்கிட்டபுரத்தில் தங்கியிருந்து கோவையில் சமையல் தொழில் செய்து வருகிறார். பிரகாஷ் பாம்மின் உறவினர் பெண்ணுடன் பினோ கோனாயக் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பில் இருந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர், இளம்பெண் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஆட்சேபகரமான பதிவை வெளியிட்டு அடிக்கடி டார்ச்சர் செய்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்த பெண், பிரகாஷ் பாமிடம் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர், பியூட்டி பார்லருக்கு சென்று பினோ கோனாயக்கிடம் விசாரித்தார். இனி இப்படி எல்லாம் இன்ஸ்டாவில் பதிவு போடக்கூடாது என எச்சரித்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பினோ கோனாயக் கத்தரிக்கோலால், பிரகாஷ் பாமை குத்தியதாக தெரிகிறது. இதில், படுகாயம் அடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவுசெய்து, பினோ கோனாயக்கை கைது செய்தனர்.
