கோவை மாநகரில் போலீஸ் ஐஸ் திட்டம்…!

கோவை மாநகரில் குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் நோக்கில் போலீஸ் ஐஸ் என்னும் குற்றத்தடுப்பு வலையமைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .

இத்திட்டம் தனியார் காவலாளிகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. போலீசார் அனைத்து இடங்களிலும், அனைத்து நேரங்களிலும் நேரடியாக கண்காணிப்பில் இருக்க இயலாத நிலையில், தனியார் காவலாளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள், நகை கடைகள், தொழிற்சாலைகள், குடோன்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், மனைகள், கல்வி நிறுவனங்கள், கட்டுமான பணி நடக்கும் பகுதிகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு காவலாளிகள் “கண்களாகவும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் காதுகளாகவும்” பயன்படுத்தி, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் தொடர்பாக கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சரக உதவி கமிஷனர்கள் ஆகியோருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

, ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் பணிபுரியும் தனியார் பாதுகாப்பு காவலாளிகள் மற்றும் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி நிர்வாகிகளுடன் சரக உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி, போலீஸ் ஐஸ் திட்டத்தின் நோக்கம் செயல்படும் விதம் மற்றும் தனியார் காவலாளிகளின் பங்கு குறித்து விரிவாக எடுத்துரைத்து வருகின்றனர்.

மேலும், தனியார் பாதுகாப்பு காவலாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள், தங்களது பணியின்போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்களின் நடமாட்டம். வீடுகள் மற்றும் கடைகளை நோட்டமிடுதல், பூட்டு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சோதித்தல், வழக்கத்திற்கு மாறான இரவு நேர நடமாட்டம், சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தும் அல்லது செயலிழக்க

செய்யும் முயற்சிகள், அத்துமீறி நுழைய முயற்சித்தல், ஊழியர்கள் அல்லது குடியிருப்பாளர்கள் போல் நடித்து நுழைய முயற்சிக்கும் நபர்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு முன்னோட்டமாக இருக்கக்கூடிய நபர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வன்முறை அல்லது கடுமையான தகராறு, சந்தேகத்திற்கிடமான நபர் அல்லது வாகனம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடனடி ஆபத்து, தீ விபத்து, சந்தேகத்திற்கிடமான பொருட்கள், அத்துமீறி நுழைதல் போன்ற அவசர சூழ்நிலைகள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் காவலாளிகள் தகவல் தெரிவிக்கும் நபர்களாக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது, யாரையும் தேவையின்றி தாக்கவோ அல்லது தடுத்து வைக்கவோ கூடாது, தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தக்கூடாது, உறுதி செய்யப்படாத தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரையும் அவரது மதம், சாதி, உடை, தோற்றம், மொழி அல்லது சமூகத்தை அடிப்படையாக கொண்டு சந்தேகிக்கவோ அல்லது பாகுபாடு காட்டவோ கூடாது எனவும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. குற்றச்சம்பவம் நடைபெற்றால் சம்பவ இடத்தில் உள்ள பொருட்களை தொடாமல் இருப்பது, பொருட்களை இடமாற்றம் செய்யாமல் சம்பவ இடத்தை பாதுகாப்பது, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது மற்றும் முக்கியமான சிசிடிவி பதிவுகள் அழிந்து போகாமல் பாதுகாப்பது குறித்தும் தனியார் காவலாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *