பொதுப்பணி துறை ஆபீசுக்கே தண்ணீர் கஷ்டம்…
கோவை டவுன்ஹால் பகுதியில் பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. கட்டுமானம், பராமரிப்பு, மின் பராமரிப்பு, பாய்லர், நிலத்தடி நீர்மட்டம் உள்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
பல நூறு ஊழியர்கள் இங்கே வேலை செய்து வருகிறார்கள். இந்த வளாகத்தில் போர்வெல் தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. அலுவலர்களுக்கான குடிநீர் கேன் மூலமாக பெறப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பிஏபி, நொய்யல், பவானி என முக்கிய நீர் ஆதாரங்களை பொதுப்பணித்துறை நிர்வாகம் பராமரித்து வருகிறது.
மாவட்ட அளவில் விவசாயத்திற்கான தண்ணீர் சப்ளை மற்றும் தடுப்பணை, குளங்கள் பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பொதுப்பணித்துறை நிர்வாகத்தினர் தங்கள் அலுவலகத்தில் குடிநீர் வசதிக்கான ஏற்பாடுகளை கூட செய்யாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குடிநீர் இணைப்பு பெறாமல் விட்டு விட்டார்களா அல்லது குடிநீர் இணைப்புக்கு பதிலாக கேன் வாட்டர் தான் சிறப்பாக இருக்கும் என கருதி அவர்கள் அதனை வாங்குகிறார்களா என தெரியவில்லை. மாநகர் பகுதியில் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் 24 மணி நேர குடிநீர் திட்டதற்கான இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான இணைப்பு பெறப்பட்டதா என தெரியவில்லை. தண்ணீர் விநியோகம் செய்து வரும் துறைக்கே குடிநீர் இல்லாத அவல நிலைமை காணப்படுகிறது.
