4 நாள் மழையை சமாளிக்கணும்… கோவை மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய கூட்டரங்கில் நடந்தது.
இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா பங்கேற்று ஒவ்வொரு மண்டலத்தின் மூலமாக பிற துறைகளுடன் இணைந்து, மேற்கொள்ள வேண்டிய மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாகவும், புதிய மழைநீர் வடிகால் கட்டுவது. ஏற்கெனவே உள்ள மழைநீர் வடிகால்களை விரிவுபடுத்துவது தொடர்பாகவும், அதிக திறன் கொண்ட புதிய மோட்டார்கள், பம்புகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொள்முதல் செய்வது தொடர்பாக கேட்டறிந்தார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி, அடுத்த நான்கு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மழைநீர் செல்லக்கூடிய தாழ்வான பகுதிகளில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்கள். அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
அதேபோல் மழை காலங்களில் தொய்வின்றி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சி சார்பில், ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ. 10 லட்சம் வீதம், வழங்கப்படுகிறது. இதில், ஜெனரேட்டர், மோட்டார், பம்பு உள்ளிட்ட தளவாட பொருட்களை வாடகைக்கு மற்றும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் பணியாளர்களையும் ஈடுபடுத்தி நிவாரணப் பணிகளை உடனக்குடன் மேற்கொள்ள வேண்டும்.
மழைநீர் செல்லக்கூடிய தாழ்வான பகுதிகளில் முன்கூட்டியே, நீர் உறிஞ்சும் மோட்டார் வாகனத்துடன் பணியாளர்கள் தயாராக இருப்பதை அந்தந்த உதவி ஆணையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களை, தேவைப்படும் பட்சத்தில், பாதுகாப்பாக தங்க வைக்கப்பதற்கு ஏதுவாக நிவாரண முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை உதவி வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் கள ஆய்வு செய்து, உறுதி செய்ய வேண்டும். .
பொதுமக்களிடமிருந்து, மழை சம்மந்தமாக பெறப்படும் புகார்கள் மீது, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
