ரேஷன் கார்டில் 3.97 லட்சம் விரல் ரேகை காணோம்…கோவையில் வீடு வீடாக சோதனை
கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (Bio Metric) அல்லது கண்கருவிழி (Iris) பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணியில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு பணி 95.03 சதவீதமும், முன்னுரிமை கார்டுகளில் 95.10 சதவீதமும் முன்னுரிமையற்ற கார்டுகள் 84.48 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.
மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் 7033, முன்னுரிமை கார்டுகள் 49,324 மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் 3,41,425 என மொத்தம் 3,97,782 ரேஷன் கார்டுகள் விற்பனை முனைய இயந்திரத்தில் (Pos Machine) விரல் கைரேகை அல்லது கண்கருவிழி பதிவு செய்யாமல் நிலுவையிலுள்ளது.
எனவே, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பயன்பெறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவு விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அல்லது அருகே உள்ள ரேஷன் கடைகளில் வரும் 31ம் தேதிக்குள் விரல்ரேகையினை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இதற்காக நாளை முதல் 31ம் தேதி வரை விடுபட்ட உறுப்பினர்களின் வீடுகளுக்கு நேரில் வரும் சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தரவேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார். மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
