சிறுவாணியில் வறட்சி: 50 சதவீதம் குடிநீர் மட்டுமே சப்ளை…
சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 50 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 29 அடி அளவிற்கு மட்டுமே நீர் இருப்பு இருக்கிறது.
கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. அணையின் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக நீர் எடுப்பு 50 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டது. குடி நீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் வெயில் தாக்கம் உச்சத்தை எட்டி இருக்கிறது. வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
தற்போதுள்ள குடி நீர் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சிறுவாணி அணைப்பகுதிக்கு தென்மேற்கு பருவமழை மூலமாக கடந்த காலங்களில் குடிநீர் கிடைத்து வருகிறது. வடகிழக்கு பருவமழை மிக அரிதாக தான் பெய்யும். தென் மேற்கு பருவ மழை இந்த மாதத்துடன் முடிவடையும்.
எனவே இப்போதுள்ள குடிநீரை வைத்து தான் தொடர்ந்து விநியோகம் செய்ய வேண்டி இருக்கிறது. குடிநீர் வடிகால் வாரியத்தனர் 29 அடி உயரத்தில் உள்ள குடிநீரை வரும் பிப்ரவரி மாதம் வரை சமாளிப்பாக வழங்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். சிறுவாணி குடிநீர் கோவை மாநகராட்சி மற்றும் 22 வழியோர கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குடிநீர் அளவு குறைந்து விட்டதால் தற்போது 50 சதவீதம் அளவிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் வினியோகம் செய்யப்படும் சுமார் 2 லட்சம் இணைப்புகளுக்கு பில்லூர், பேரூர் கூட்டுக் குடிநீர் திட்டம், ஆழியாறு மற்றும் இதர குடிநீர் திட்டங்களில் இருந்து குடிநீர் பெறப்பட்டு இணைத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோவையின் அடையாளமாக சிறுவாணி குடிநீர் இருக்கிறது.
ஆனால் அணையின் நீர்மட்டம் வறட்சியில் இருப்பதால் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். சிறுவாணி பெயிலர் திட்டமாக மாறி வருகிறது. சிறுவாணி அணையில் எடுக்கப்படும் குடிநீர் மயிலான் பங்களா வரை குகை பாதை வழியாகவும், பின்னர் நீரோடை வழியாகவும் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சப்ளையாகிறது.
சுமார் 5 கி.மீ தூரம் ஓடை வழியாக குடிநீர் பாய்கிறது. இதில் வழியோர ஓடைகளின் மூலமாக குடிநீர்
கிடைத்து வந்தது. கடந்த 3 மாதமாக வறட்சியால் ஓடை குடிநீரும் கிடைக்காத நிலையிருக்கிறது. இந்த பகுதியில் உள்ள யானை, மான் போன்ற வன விலங்குகளும் தண்ணீர் தேடி சுத்திகரிப்பு நிலையம் நோக்கி வர வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிறுவாணி அணைக்கு மாற்றாக சிறுவாணி அடிவாரத்தில் உள்ள ஓடைகளை ஒருங்கிணைக்க கடந்த காலங்களில் திட்டமிடப்பட்டது.
ஆனால் இதற்கான விரிவான முயற்சி எடுக்காமல் விடப்பட்டது. நொய்யல் ஆறு வறண்டும் விடும் என குடிநீர் திட்டத்திற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. சிறுவாணி அணை கடந்த 7 ஆண்டுகளில் ஒரு முறை கூட நிரம்பவில்லை. அணையில் 44.50 அடி வரை மட்டுமே குடிநீர் தேக்க கேரள நீர்பாசனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அணையின் பக்க சுவரும் பலகீனமாக இருக்கிறது.
கோவையின் பாரம்பரிய அடையாளமான சிறுவாணியை யுனெஸ்கோ நிறுவனம் தென்னிந்தியாவின் 2வது சுவையான குடிநீர் என அறிவித்தது. ஆனால் இந்த பெருமையை தக்க வைக்கும் அளவிற்கு சிறுவாணி குடிநீர் கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவுகிறது. சிறுவாணி குடிநீர் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
