கோவையில் தாய் மகனுடன் கிணற்றில் குதித்த இளம் பெண் சாவு…

கோவை சிங்காநல்லூரில் குடும்ப தகராறில் தாய் மகள் உட்பட 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இவர்களில் மகள் பரிதாபமாக இறந்தார். 2 பேர் மீட்கப்பட்டனர்.

கோவை சிங்காநல்லூர் ராவத்தூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி பீணா (43), மகள் ரம்யா (25), ரம்யாவின் கணவர் சனூப். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 20 நாட்களாக ரவிக்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது.

இதேபோல் ரம்யாவுக்கும், அவரது கணவர் சனூப்புக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து ரம்யா சமீபத்தில் சிங்காநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார் . பீணாவும், ரம்யாவும் தங்களது வாழ்க்கையை நினைத்து கடும் மன உளைச்சலில் இருந்தனர்.

வாழ்க்கையில் விரக்தியடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 15ம் தேதி இரவில் தங்களது வீட்டருகே உள்ள கிணற்றில் பீணா, தனது மகள் ரம்யா மற்றும் பேரனுடன் கிணற்றில் குதித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதியை சேர்ந்த பாலு மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் கிணற்று நீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் ரம்யா நீரில் மூழ்கி பலியானார். பீணாவும், அவரது பேரனும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

குடும்ப தகராறில் தாய், மகள் உட்பட 3 பேர் தற்கொலைக்கு முயன்று மகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *