உரிமைத்தொகை கேட்டு மகளிர் முற்றுகை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி தலைமையில் இன்று நடந்தது.

இதில் சிங்காநல்லூர் போயர் வீதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (70) அளித்த மனுவில், “சிங்காநல்லூரில் உள்ள எனது நிலத்தில் பக்கத்து வீட்டு நபர் வீடு கட்டி வருகிறார். நான் கேட்ட போது, நான் அப்படி தான் கட்டுவேன், அதை யாரும் தடுக்க முடியாது எனக்கூறி மிரட்டினார்.

நான் போலீசில் புகார் அளித்த போது போலீசார் புகார் மனு வாங்க மறுத்து விட்டனர். எனது இடம் என்பதற்கான ஆதாரங்களுடன் நான் தெரிவித்தும் தடுக்கவில்லை. எனது இடத்தை மீட்டு தர வேண்டும். தனி நபர் நில அபகரிப்பை தடுக்க வேண்டும், “என தெரிவித்திருந்தார்.

செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (36). இவர் கணவர் சில ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். இவர் அளித்த விண்ணப்ப மனுவில், “நான் எந்த ஆதரவின்றி வீட்டு வேலை செய்து பிழைத்து வருகிறேன். எனக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். மகளிர் உதவி தொகை, விதவை பெண் உதவி தொகை என எதாவது உதவி வழங்க வேண்டும், “என தெரிவித்தார்.

பீளமேடு வினோபாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சித்ரா என்பவர் அளித்த மனுவில், “என் தந்தை 2 ஆண்டிற்க முன் இறந்து விட்டார் அவரின் வாரிசான எனக்கு சொத்துக்களுக்கான ஆதாரங்களை காட்டி பட்டா மாறுதல் செய்து தர கோரிக்கை விடுத்தேன். என் பெயரில் மின் இணைப்பு, குடிநீர், சொத்து வரி இருப்பதற்கான ஆதாரம் தந்தும் பட்டா மாறுதல் செய்ய மறுக்கிறார்கள்.”என கூறியிருந்தார்.

போத்தனூர் கிழக்கு வீதி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த சந்திர பிரபா அளித்த மனுவில், “என் தந்தை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஊழியராக 40 ஆண்டு பணியாற்றினார். அவர் இறந்த பின்னர் வாரிசு அடிப்படையில் எனக்கு பணி வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுத்தேன். ஆனால் வேலை வழங்கப்படவில்லை. எனக்கு பணி நியமன உத்தரவு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.

பிஎன் புதூர் மட்டசாலை பகுதியை சேர்ந்த நாகம்மாள் (75) என்பவர். “நான் 30 ஆண்டாக வீட்டில் வசிக்கிறேன். சில ஆண்டிற்கு முன் என் வீட்டின் பக்க சுவர் இடிந்து விழுந்து விட்டது. அப்போது மின் வாரியத்தினர் மின் இணைப்பை அகற்றினார்கள். பிறகு அவர்கள் மின் இணைப்பு தரவில்லை.

என் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு நபர்களுக்கு தந்து விட்டதாக கூறினார்கள். நான் 5 ஆண்டிற்கு மேலாக மின் இணைப்பு இல்லாமல் இருட்டு வீட்டில் தனிமையில் வசிக்கிறேன், உதவி செய்து மின் இணைப்பு தர வேண்டும். என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 350 க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனு அளித்தனர். பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் இதற்காக சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு புகார் மனுக்கள் பெறப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை தமிழக வெற்றிக்கான ஆட்சி வந்த பின்னர் புதிதாக யாருக்கும் வழங்கப்படவில்லை.

ஏற்கனவே வழங்கப்பட்ட மகளிர்க்கு மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இவர்களின் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என யாருக்கும் தெரியாத நிலைமை இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *