கோவை புதிய சிறை கட்ட ஏழை மக்களின் நிலங்கள் கையகப்படுத்த நோட்டீஸ்…
கோவை காந்திபுரத்தில் மத்திய சிறை அமைந்துள்ளது.
இந்த சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையை காரமடை பிளிச்சி பகுதிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே பிரமாண்டமான சிறை கட்டப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டில் பணி முடியும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சிறை கட்ட அந்த பகுதியை சேர்ந்த சில ஏழை மக்களின் நிலம் கட்டாயப்படுத்தி பெறப்பட்டதாக தெரிகிறது.
குறிப்பாக ஒன்னிபாளையம் ஜோதிமணி, பிரேமா உள்ளிட்ட சிலரின் நிலங்களை வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்து பெற கையகப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் 96 ஏக்கரில் 327 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரம் கைதிகள் அடைக்கும் வகையில் சிறை தயார் செய்யப்பட்டு வருகிறது.
இங்கே நிர்வாக அலுவலகம், மருத்துவமனை, காவலர் குடியிருப்புகளும் அமைக்கப்படுகிறது. ஆனால் போதுமான இடம் இல்லாமல் ஏழை மக்களின் நிலத்தை வருவாய்த்துறையினர் மூலமாக கட்டாயப்படுத்தி பெறுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிலம் பெற நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.
சிலரின் வீடுகளையும் இடித்து அகற்றி விட்டு அங்கே சிறைக்கான கட்டுமான பணிகள் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. சிறைக்காக ஏழை மக்களின் நிலம் பறிக்கப்படுவது தொடர்பாக வருவாய்த்துறையில் புகார் குவிந்து வருகிறது.
