இலவச மனை பட்டா வீடு கேட்டு 764 பேர் மனு…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில், அம்பேத்கர் மக்கம் விடுதலை கழகம் தலைவர் ரங்கநாதன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில்,

“கீரணத்தம் ஆதிதிராவிடர் காலனியில் 15 ஆண்டிற்கும் மேலாக வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். மணியக்காரன்பாளையம் கக்கன் வீதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. அதிகாரிகளிடம் புகார் கூறியும் குடிநீர் வழங்கவில்லை. கோவில்பாளையம் பகுதியில் 45 சி என்ற ஒரே ஒரு பஸ்தான் இயங்கி வருகிறது.

பள்ளி, கல்லூரி, வணிக, வர்த்த நிறுவனங்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் ஒரு பஸ்சை நம்பி மக்கள் தவிப்படைந்துள்ளனர். அன்னூர், காந்திபுரம் வழிதடத்தில் என்ஜிபி கல்லூரி வழியாக கூடுதல் பஸ் இயக்கவேண்டும். பொம்மணாம்பாளையம் மதுரை வீரன் தெருவில் சிலர் மாடுகளை கட்டி வைத்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் அந்த வழியாக செல்பவர்களை மாடு முட்டி விடுகிறது. சிறுவர்கள் காயமடைந்து விடுகின்றனர். இது தொடர்பாக புகார் தந்தும் மாடுகளை தெருவில் விடுவதை தடுக்கவில்லை” எனக்கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அனைத்து தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், “பொள்ளாச்சி என்.சந்தராபுரம் பகுதியில் நத்தம் மனையிடத்தில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு கடந்த 1996ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலையில்,

நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகளுக்காக வீடு மற்றும் இடத்தை எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். இங்கே வசிப்பவர்கள் அனைவரும் கூலிக்கு வேலைக்கு செல்லும் ஏழை தொழிலாளர்கள். எனவே, மாற்று இடம் தராமல் வீடுகளை காலி செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும்” எனக்கூறியுள்ளனர்.

இதேபோல், சூலூர் காடம்பாடி பகுதியை சேர்ந்த பெண்கள் கூட்டமாக வந்து, தங்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இன்று ஒரே நாளில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு கேட்டு 764 பேர் மனு கொடுத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *