கோவை மாவட்டத்தில் இனி அனைத்து புல எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பு…
தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் கடந்த 2023ம் ஆண்டில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது.
தற்போது இந்த வழிகாட்டி மதிப்பில் (கைல்ட் லைன் வேல்யூ) திருத்தம் செய்து அறிவிக்கப்பட உள்ளது. 3 ஆண்டிற்கு பிறகு தற்போது மாநில அளவில் வழிகாட்டி மதிப்பில் புதிய மாற்றம் கொண்டுவர ஆயத்த பணிகள் நடக்கிறது.
மாநில அளவில் 576 சார்-பதிவாளர் அலுவலகம் மூலமாக வருவாய் கிராமங்களில் விவசாயம், தொழிற்சாலை, வணிகம், குடியிருப்பு, புறம்போக்கு என பல்வேறு நில வகைகளுக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் 8 பிரதான சாலைகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு வழிகாட்டி மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, ராஜவீதி, பெரிய கடைவீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டி.பி ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, அவினாசி ரோடு உள்ளிட்ட வணிக பகுதிகளின் வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருக்கிறது.
கோவை மாவட்டத்தில் எல்பிஏ ஏரியா மற்றும் கிராம பகுதிகளில் முக்கிய பிரதான சாலை, வணிக பகுதிகளில் சதுரடி நிலம் ஏற்கனவே பல மடங்கு அதிகமாகி விட்டது. வழிகாட்டி மதிப்பில் சீர்திருத்தம் செய்து, அதை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் படுவேகமாக நடக்கிறது.
கடந்த காலங்களில், வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யாமல் விடப்பட்ட இனங்களுக்கு, தற்போது வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, அனைத்து புல எண்களுக்கும் (எஸ்.எப்.எண்) வழிகாட்டி மதிப்பு இடம்பெறும். இனி, வீதி, தெரு பெயர்கள் அடிப்படையில் விடுபட்ட புல எண்களுக்கு வழிகாட்டி மதிப்பு வழங்கப்படமாட்டாது.
மேலும், புதிதாக உருவாக்கப்படும் லே-அவுட்களுக்கும் புல எண் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலமாக பதிவு துறைக்கு, முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணம் மூலமாக அதிகளவில் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, பத்திரப்பதிவு ஆவணங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ரியல் எஸ்டேட் துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கும் நோக்கில், விடுபட்ட இனங்களுக்கு புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்போவது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
“ஒரே வீதியில் விடுபட்ட இனங்களுக்கு அதிக தொகை வழிகாட்டி மதிப்பாக நிர்ணயம் செய்யக்கூடாது, அப்படி செய்தால் அந்த வீதி முழுக்க அதே தொகை வழிகாட்டி மதிப்பாக மாறிவிடும். எனவே, விடுபட்ட பகுதிகளுக்கு புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் முறையாக செய்யவேண்டும். நில மதிப்பு இன்றி ‘நோ வேல்யூ’ என குறிப்பிட்டு வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யக்கூடாது” என பத்திர எழுத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வழிகாட்டி மதிப்பு இனி கோவை மாவட்ட அளவில் முறையாக, சரியாக இருக்கும். பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலமாக வீதி, வீதியாக ஆய்வுசெய்து மதிப்பு இறுதிசெய்யும் பணி நடக்கிறது. அனைத்து புல எண்களுக்கும் வழி காட்டி மதிப்பு நிர்ணயம்
செய்துவிட்டால், அரசுக்கு வரவேண்டிய முத்தரை தாள் கட்டணம், இதர கட்டணம் ஆகியவற்றை முழுமையாக பெற முடியும். இனி, வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, பத்திரப்பதிவு துறை இந்த திட்டத்தை தீவிரமாக கையாண்டு வருகிறது. பொதுமக்களுக்கு இனி அலைச்சல், பிரச்னை இருக்காது. சொத்து பதிவுசெய்த பின்னர், நிலுவை கட்டணம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்படாது” என்றனர்.
