நடிகர் பாக்கியராஜுக்கு கோவையில் நினைவஞ்சலி… நடிகர் சிவகுமார், சுந்தர்ராஜன் உருக்கமான பேச்சு…
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்என்ஆர் அரங்கத்தில் மறைந்த சினிமா நடிகர், இயக்குநர் பாக்கியராஜ் நினைவு அஞ்சலி இன்று நடந்தது.
இதில் நடிகர் சிவக்குமார். இயக்குநர் சுந்தர்ராஜன், பாக்கியராஜ் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு உள்ளிட்டோர் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தினர். இதில் அண்ணாபூர்ணா குரூப் தலைவர் சீனிவாசன், முன்னாள் மேயர் பாலகிருஷ்ணன், ஆடிட்டர் கார்த்திகேயன், முன்னாள் லயன்ஸ் கிளப் இயக்குநர் ராமகிருஷ்ணமூர்த்தி, மனோகரன், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், “பாக்கியராஜ் சினிமா படங்களை மறக்க முடியாது. டார்லிங், டார்லிங், டார்லிங் படத்தில் அவர் அப்பாவியாக நடித்திருப்பார். அந்த வயதில் அவரை போல் அப்பாவியாக நடிக்க யாருமே இல்லை. அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார். படத்தின் கிளைமேக்ஸ் யாருமே யூகிக்க முடியாது. கடையில் கதாநாயகி வில்லன் கதாபாத்திரத்தை திருமணம் செய்ய வேண்டிய நிலை இருக்கும்.
அதை ஒரு டைரியில் எழுதப்பட்ட வார்த்தைகளை வைத்து பாக்கியராஜ் திருப்பமாக உருவாக்கியிருப்பார். இது நம்ம ஆளு படத்தில் சிறப்பாக அசத்தியிருப்பார். வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் பாக்கியராஜ் நடித்த படத்தில் கடைசியில் அவருக்கு பேச்சு வந்து விடும் ஆனால் பேச்சு வந்த பின்னர் அவர் பேச விருப்பம் இல்லாத நிலையில் இருப்பார். இது தான் அந்த படத்தின் அசாத்திய வெற்றிக்கு காரணம்” என்றார்.
இயக்குநர் சந்தர்ராஜன் பேசுகையில் “பாக்கியராஜ் இறப்பு அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலை பிறந்த ஊரான கோவைக்கு கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இங்கே அஞ்சலி செலுத்த வந்தவர்களின் பாசத்தை என்றும் மறக்க முடியாது, “என்றார்.
பாக்கியராஜ் மகன் சாந்தனு பேசுகையில், “அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான் நிஜமான சந்தோஷம். என் அப்பா இறப்பிற்கு சினிமா மட்டுமின்றி பொதுமக்கள் ஏராளமானவர்கள் மழை, வெயில் பார்க்காமல் வந்து அஞ்சலி செலுத்தினார்கள், அவர் எவ்வளவு பேரின் அன்பை பெற்றிருந்தார் என்பது எங்களுக்கு தெரிந்தது.
அவரின் ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு இருக்கும். எனக்கு உறவினர்கள் நீங்கள் இருப்பீர்கள் என இங்கே வந்தவர்கள் கூறியது நெகிழ்வாக இருந்தது என்றார்.
பாக்கியராஜின் பள்ளி ஆசிரியர் கலந்துகொண்டு, பாப்பநாயக்கன்பாளையம் மணி பள்ளியில் படிக்கும். பாக்கியராஜ் நாடகம் நடிப்பார். அவரின் திறமை அப்போதே தெரிந்தது. நானும் அவர்களுடன் நாடகத்தில் ஈடுபட்டேன். எப்போது கோவை வந்தாலும் என்னை வந்து பார்த்து செல்வார்” என்றார்.
பள்ளி நண்பர் ராமகிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “நாங்கள் சினிமா தொடர்பாக அடிக்கடி பேசுவோம். தமிழ்நாடு என்னை பற்றி பேச வேண்டும். தலைப்பு செய்தியில் பேர் வரவேண்டும் என் படத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என அதீத விருப்பத்தில் பாக்கியராஜ் இருந்தார். அதை நோக்கி முயற்சி செய்து வெற்றி பெற்றார். ” என்றார்.
