கோயில் நிலங்களை பட்டா போட்டு தரலாமா …நயினார் நாகேந்திரன் பேட்டி

கரூர் கோவில் நில விவகாரத்தில் ஆய்வு செய்து பாஜக போராட்டம் நடத்தும் என கோவையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி:

கோவை பீளமேட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் 3,085 ஏக்கர் நிலம் தொடர்பாக அவசரமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் பரிந்துரையின் அடிப்படையில் ஒரே நாளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எந்த அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டன என்பது குறித்து சந்தேகம் எழுப்பினார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், முழுமையான ஆய்வுக்குப் பிறகு கோவில் சொத்துகளை மீட்கும் வகையில் பாஜக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என்றும் தெரிவித்தார்.

கரூரில் நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வாரிசு அடிப்படையில் பணி வழங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், வேலை வழங்கியதை எதிர்க்கவில்லை என்றாலும், பல்வேறு துறைகளில் ஏற்கனவே பணிக்காக காத்திருக்கும் வாரிசுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியிருந்ததாக கூறினார். முன்னுரிமை மற்றும் மூப்பின் அடிப்படையில் வேலை வழங்கியிருந்தால் அது சரியான நடைமுறையாக இருந்திருக்கும் என்றார்.

மேலும், கோவில் நிலங்களை தனியாருக்கு வழங்குவதற்கான தகுதி அரசுக்கு என்ன உள்ளது என்றும், அரசாணை மற்றும் பயனாளிகளின் விவரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு விரிவாக கருத்து தெரிவிப்பேன் என்றும் கூறினார்.

“பணம் கொடுப்பது மட்டுமே லஞ்சம் அல்ல; தனக்கு வேண்டியவர்களுக்கு செய்யப்படும் உதவியும் ஒரு வகையில் லஞ்சம்தான்” என்று கருத்து தெரிவித்த அவர், கோவில் நிலங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விதம் குறித்தும் விமர்சனம் செய்தார்.

கரூரில் நடைபெற்ற முதல்வரின் நிகழ்ச்சியை அரசு பள்ளிகளில் ஒளிபரப்பியதாக எழுந்துள்ள கேள்விக்கு பதிலளித்த அவர், இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடந்ததில்லை என்றும், பள்ளி மாணவர்களுக்கு அரசியல் நிகழ்ச்சிகளை காட்டுவது தவறான முன்னுதாரணம் என்றும் கூறினார். முதல்வர் வருகையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதும், அவரது நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஒளிபரப்புவதும் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் செயலாகும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான உர மானியம் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், மத்திய அரசு யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருவதாக கூறினார். இந்த மானியத் திட்டத்தில் மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், உரங்கள் முறைகேடாக வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படும் தகவல்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே கருத்து தெரிவிப்பேன் என்றார்.

அயோத்தி ராமர் கோவில் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த இடத்தில் தவறு நடந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியது தான் என்றும், இறுதி அறிக்கை வெளியான பிறகு அந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவிப்பேன் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து பேசிய அவர், அவரது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்ந்து மாறி வருவதாக விமர்சித்தார். திமுக கூட்டணியில் இருந்தபோது ஒரு நிலைப்பாடு, தற்போது வேறு நிலைப்பாடு என பேசி வருவதாக கூறிய அவர், 2029 தேர்தலில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்கத் தயாராகி வருவது தெளிவாக தெரிகிறது என்றும், “பாஜகவை பார்த்து அனைவரும் பயப்படுகின்றனர்” என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *