முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க விட மாட்டேன், கவசமாக இருப்பேன்… கோவையில் வைகோ ஆவேசம்…!
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: குறிப்பிட்ட ஒரு பத்திரிகை என்னை புண்படுத்தும் விதமாக கேள்வி கேட்டபோது பொறுமையாக பதில் சொன்னேன். திரும்ப, திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு உள்ள சுதந்திரம் எனக்கும் உள்ளது.
எனக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. நான் வருத்தம் தெரிவித்தேன். மூன்று தினங்களுக்கு முன்பு கருவேல மரங்களை அகற்ற சென்றபோது, மீண்டும் அதே பத்திரிகை நிருபர் புண்படுத்தும் விதமாக கேள்வி கேட்டார். அதே பத்திரிகை சார்பில் யாராக இருந்தாலும் பொறுமை காக்க மாட்டார்கள். என்னை இப்படி இழிவுபடுத்துகிறார்கள். அசம்பாவிதம் நடக்கக்கூடாது என்று பயந்தேன்.
தவெக அரசு அமைக்க போதுமான எண்ணிக்கை வந்த பிறகும் ஆட்சி அமைக்க வழிவிடாமல் கேலி செய்கிறார்கள். அதிலேயே ஓரவஞ்சனை தெரிந்தது. மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும் 356-வது பிரிவை அகற்ற வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. அந்த அரசு கவிழ்ந்துவிடும், ஆறு மாதம் கூட நீடிக்காது என்கிறார்கள்.
அரசை கவிழ்த்துவிட்டு கவர்னர் ஆட்சியை கொண்டு வர வேண்டுமா?. இந்துத்துவா, பாஜவை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்பதை தான் முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் நான் சொன்னேன். அதே நேரத்தில் 356-ஐ பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்.
தவெக அரசை குதிரை பேரம் என கூறும் திமுகவினர், கம்பத்தில் தேர்வு செய்யப்பட்ட மதிமுக உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்தது பெருச்சாளி பேரமா?. அதுவும் குதிரை பேரம் தான். நீங்கள் தான் முன்பு வழிகாட்டி இருக்கிறீர்கள். அதிமுகவில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் என எடப்பாடி எடுத்த நிலைப்பாடு பலருக்கு பிடிக்கவில்லை.
30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எதிர்த்தனர். இந்த முயற்சி எடுபடவில்லை. ஆனால், இப்படி பேசியது உண்மை தான். இந்த ஆட்சி என்ன செய்கிறது என்று திமுக கேட்கிறது. நல்ல காரியம் செய்திருக்கிறது. ஜனநாயகத்தை நாசப்படுத்தும் விதத்தில் ஊழல், எதற்கெடுத்தாலும் கமிஷன் என்ற நிலை இப்போது இல்லை. கமிஷன் என பேசுவதற்கே இடமில்லை. லஞ்சம் நீக்கப்பட்டுள்ளது.
இதுவே தவெக அரசின் இமாலய சாதனை. ஆட்சியை இழந்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியவில்லையா?. தவெகவை ஆதரிப்பதால் என் மீது கோபம் கொண்டு பாய்கிறார்கள். மதிப்புடன் நடத்துங்கள் என்றோம். ஆனால், “4 சீட்” என்று முகத்தில் அடித்தது போல் சொன்னார்கள். அவமதித்தாலும் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டேன். ஆட்சி இல்லாமல் இருக்க முடியவில்லையா? வேறு ஏதோ காரணம்.
உதயநிதியின் சோபா குறித்த பேச்சுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. மேகதாது அணையை கட்ட சொல்லி தூண்டிவிடுவது ஒன்றிய அரசு தான். மோடி அரசு தான் காரணம். இந்த விவகாரத்தில் தமிழகம் கொந்தளித்து எழ வேண்டும். இது தமிழ்நாட்டிற்கே வரும் ஆபத்து. 25 மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தொண்டர்கள் திமுகவுடன் ஒட்டக்கூடாது, உறவு வைத்துக்கொள்ள கூடாது என்கிறார்கள். எதிரணியில் இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து முதல்வர் விஜயை காக்க நான் கவசமாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
