Trading cheating: கோவையில் பிட்காயின் மோசடியில் 5 பேர் கைது…
பிட்காயின் டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச பெருமாள் (40). இவர், தற்போது துபாய் அபுதாபியில் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கோவையில் இருந்த போது கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் மர்ம நபர்கள் அழைத்துள்ளனர்.
அவர்கள், ஸ்ரீனிவாச பெருமாளிடம் ஆன்லைன், பிட்காயின் டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி அவர் பல்வேறு தவணைகளாக ரூ. 27 லட்சத்து 45 ஆயிரத்து 800ஐ அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின், அவருக்கு எந்த பணமும் கிடைக்க வில்லை. அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்களை அழைத்த போது தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் கோவை அறிவொளி நகரை சேர்ந்த வசந்த் (20), கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்த அஜல் (22), திருப்பூர் மாவட்டம் கொங்கணகிரியை சேர்ந்த ஜனகன் (23), திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த பரத் (26), நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (38) ஆகியோர் ஸ்ரீனிவாச பெருமாளை ஏமாற்றி மோசடி செய்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஸ்ரீனிவாச பெருமாளின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தொழில் நுட்ப ஆதாரங்களுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கோவை அறிவொளி நகரை சேர்ந்த வசந்த் என்பவரை முதலில் கைது செய்தோம். அதன் பின்னர் அடுத்தடுத்து அஜல், ஜனகன், பரத், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 5 பேரும் கூட்டாளிகளாக இணைந்து ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் 9 மாநிலங்களில் 15க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பரத் என்பவர் சிம்கார்டு விற்பனையாளரான இருந்து வந்துள்ளார். அவர் வாடிக்கையாளர்கள் தங்களது ஆவணங்களை கொடுத்து சிம்கார்டு வாங்கும் போது,
அதே ஆவணத்தை பயன்படுத்தி தங்களது கூட்டாளிகளுக்கு 250க்கும் மேற்பட்ட சிம் கார்டு பெற்று கொடுத்துள்ளார்.
வசந்த் என்பவர் தனது வங்கி கணக்கை வாடகைக்கு விட்டும், அஜல் என்பவர் கமிஷன் ஏஜென்டாகவும்,
ஜனகன் என்பவர் வங்கிக்கணக்கு மற்றும் சிம் கார்டுகளை பெற்றுத்தரும் புரோக்கராகவும் இருந்து வந்துள்ளனர். அதேபோல உதயகுமார் ஆன்லைன் கேம் மூலம் பணம் பெறுவது தொடர்பாக பிலிப்பைன்ஸ் சேர்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
பின்னர், இந்தியா வந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வங்கி கணக்குகளை வெளிநாட்டு நபர்களுக்கு மோசடிக்காக பயன்படுத்த அனுப்பும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்துள்ளார். உதயகுமாருக்கு சென்னை மத்திய பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இவர்கள் இது போன்று எத்தனை பேரை ஏமாற்றி உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
