பாதையில் தூங்கறாங்க, பரிதாபத்தில் கோவை ஜிஎச்…
கோவை அரசு மருத்துவமனையில் 1200க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, எலும்பு முறிவு வார்டு, நரம்பியல் வார்டு போன்றவற்றில் நோயாளிகள் அதிகமாக இருக்கிறார்கள். நோயாளிகளுடன் வரும் உறவினர்கள், பார்வையாளர்களாக மருத்துவமனை வளாகத்தில் தங்கி உதவி செய்ய வேண்டியுள்ளது.
பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் தங்குவதற்கு மருத்துவமனை வளாகத்தில் போதுமான இட வசதி செய்து தரவில்லை.
பிரசவ வார்டின் முன் பார்வையாளர்கள் கூட்டம் குவிந்துள்ளது. உட்கார கூட இடமின்றி பார்வையாளர்கள் தவிக்கின்றனர். பாதைகளில், காலி இடங்களில் சிலர் பாய் விரித்து போட்டு உட்கார்ந்துள்ளனர். சிலர் பாதையோரம் படுத்து தூங்கும் நிலையிருக்கிறது. செருப்பு வைக்க கூட இடமின்றி குப்பை போல் குவித்து வைத்துள்ளனர். குழந்தைகளில் வார்டிலும் இதே நிலை தான். அதிக கூட்டம் வருவதால் மருத்துவமனை நிர்வாகத்தினரால் சமாளிக்க முடியவில்லை.
| நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை வீட்டிற்கு அனுப்புவது சவாலான காரியமாக இருக்கிறது. பார்வையாளர்களுக்கு தனி கூடாரம் அமைத்த தர வேண்டும். வார்டின் முன் இடம் இல்லாவிட்டால் பார்க்கிங் ஏரியா அல்லது காலி இடங்களில் தனி ஷெட் அமைத்து தரலாம். மேலும் பார்வையாளர்கள் வார்டிற்குள் மற்றும் பொது இடங்களில் அசுத்தம் செய்து வருகின்றனர்.
இதனால் நோய் பரவல் அதிகமாகும் நிலையிருக்கிறது. எனவே அசுத்தம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பீடி, சிகரெட், வெற்றி பாக்குகளை வார்டு பகுதிகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. மருத்துவமனை வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
