பேரூர் நொய்யல் கரையில் ஆடிப்பெருக்கு…

. கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தென்னகத்தின் காசி என அழைக்கப்படும் பேரூர் முக்தி தரும் தலமாக கருதப்படுகிறது. இறந்த முன்னோர்களுக்கு இங்கே சடங்கு செய்து தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று பிறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுக்க அதிகளவு பொதுமக்கள் வந்திருந்தனர்

அதேசமயம், இறந்து போன குழந்தைகள், திருமணம் ஆகாத பெண்கள், மற்றும் பெரியோர் ஆகியோருக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர்.

இறந்து போன தங்களது குழந்தைகள், கல்யாணம் ஆகாமல் இறந்து போன பெண்கள், முன்னோர்களுக்கு இலைப்படையல் வைத்து, 7 கூழாங்கற்களை கன்னிமார் தெய்வங்களாக உருவகித்து, காதோலை, கருகுமணி, தாழைமடல், நாணல்இலை, தின்பண்டங்கள் ஆகியன வைத்து வழிபாடு செய்தனர்

படித்துறை படிக்கட்டில் வாழை இலை விரித்து, முறுக்கு, இனிப்புகள், பழங்கள், தேங்காய், பூ ஆகியவற்றை படைத்து 7 கூலாங்கற்களை சப்த கன்னிகளாக பாவித்து கற்பூரம் ஏற்றி பித்ருக்களையும், தெய்வங்களையும் வழிபட்டனர். மேலும், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் நடக்க வேண்டியும், திருமணமானவர்கள் குழந்தை வேண்டியும் சப்த கன்னிகளை வழிபட்டனர். சுமங்கலி பெண்கள் தாலி கயிறுகளை மாற்றிக்கொண்டனர்.

சப்த கன்னிகளையும், முன்னோர்களையும் வழிபட்ட பொதுமக்கள் அன்னதானம் செய்து, பசு மாட்டிற்கு அகத்திகீரையை வழங்கினர்.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால், திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள், நொய்யல் ஆற்றில் நீராடும் வகையில் பேரூர் பேரூராட்சி சார்பில், ஆற்றின் கரையில், பைப் மூலம் ஷவர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ஷவரில் திதி கொடுத்த பக்தர்கள் நீராடி சென்றனர்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில், பழைய துணிகள், குப்பை வீசாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

One thought on “பேரூர் நொய்யல் கரையில் ஆடிப்பெருக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *