12 கடைகளில் ஷட்டர் லாக் உடைத்து கொள்ளை: கோவையை பதற வைத்த 2 பேர் கைது…!

கோவை அன்னூர் பகுதியில் உள்ள 12 கடைகளின் ஷட்டர் லாக் உடைத்து பணம் மற்றும் பல்வேறு பொருட்களை திருடி சென்றதாக புகார் பெறப்பட்டது.

கொள்ளை நடந்த வணிக வளாக பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் இரண்டு திருடர்கள் முகத்தை மூடி குல்லா அணிந்து பூட்டை உடைத்து திருடிய காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சில இடங்களில் திருடர்களின் முகம் தெளிவாக தெரிய வந்தது.

அதை வைத்து விசாரித்த போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த புயல் ஆறுமுகம் (29 ) மற்றும் பாண்டி( 19 ) என தெரியவந்தது. இவர்களை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்த போது திருடுவதற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து பஸ் மூலமாக கோவை வந்ததும் பின்னர் அன்னூர் சென்று நள்ளிரவு நேரத்தில் அடுத்தடுத்து உள்ள 12 கடைகளில் கைவரிசை காட்டியதாகவும் திருடிய பணத்துடன் சொந்த ஊருக்கு சென்றதும் பணத்தை ஜாலியாக செலவு செய்ததும் தெரியவந்தது .

போலீசார் இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது தமிழகம் முழுவதும் ஏராளமான வழக்குகள் உள்ளன. குறிப்பாக புயல் ஆறுமுகம் மீது 26 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கும்பல் கோவையில் மட்டுமின்றி திருப்பூர் மாவட்டத்திலும் ஏராளமான கடைகளில் கைவரிசை காட்டி பல லட்ச ரூபாய் திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *