சிங்காநல்லூர் மேம்பாலம்: மண் ஆய்வு பணி துவக்கம்

கோவை சிங்காநல்லூரில் மேம்பாலம் பணிக்கான ஆயத்த வேலை துவங்கியது. மண் ஆய்வு பணி நடக்கிறது. விரைவில் பில்லர் அமைக்கப்படவுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது.

இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு இதற்கான நிதியை ஒதுக்கி டெண்டர் விட்டு பணியை துவக்க வில்லை. மேம்பாலம் 2.4 கி.மீ தூரத்திற்கு அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு துவக்கத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 ஆண்டு தாமதத்திற்கு பின் நிதி ஒதுக்காத நிலையில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தினால் திட்ட மதிப்பீடும் மாறி விட்டது. தற்போதைய சூழலில் திட்ட மதிப்பீடு 170 கோடி ரூபாய் என அகிகரிக்கப்பட்டது. கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. சென்னையை சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்திற்கு மேம்பாலம் கட்டும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மேம்பால பணி நடக்கும் இடத்தில் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான ஆய்வும், மண் பரிசோதனையும் நடக்கிறது. சில இடங்களில் அதிக ஆழம் குழி தோண்டி பில்லர் போட வேண்டியுள்ளது. மேலும் பணிகள் நடத்தும் போது மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பி விட வேண்டியுள்ளது. அதிக வாகனங்கள் சென்று வருவதால் மேம்பால பில்லர் பணிகள் மட்டுமே ரோட்டில் நடத்தப்படும்.

டெக், தாங்கு தளம் போன்றவை வேறு இடத்தில் யார்டு அமைத்து உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக போக்குவரத்து நெரிசல் குறையும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். நெரிசல் காணப்பட்டால் நஞ்சுண்டாபுரம். வெள்ளலூர் ரோடு, திருச்சி ரோட்டில் செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் விட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பணிகளை 2 ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில். நீண்ட கால எதிர்பார்ப்பில் இந்த மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. 40 நாட்களில் மண் பரிசோதனை முடிந்து விடும் அதற்கு பின்னர் பில்லர் குழி தோண்டப்படும். பணி நடந்தாலும் வாகனங்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளுக்காக வாகனங்களை நிறுத்த மாட்டோம்.

உரிய கால அவகாசத்தில் பணி முடிக்கப்படும். டெக் உருவாக்க ஒப்பந்த நிறுவனங்கள் தனி இடம் அமைத்து அங்கே உருவாக்கி கிரேன் மூலமாக கொண்டு வந்து பொருத்த வழிவகை செய்யப்படும். சமீப காலமாக மேம்பாலங்களில் இதுபோன்ற முறை தான் பின்பற்றப்படுகிறது. மேம்பாலத்தில் அதிக வளைவுகள் இருக்காது. குறிப்பிட்ட சில இடங்களில் நிலம் தேவைப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறோம், பணிகள் தொடர்ந்து நடத்த இனி எந்த தடையும் கிடையாது” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *