கோவை பைபாஸ் ரோட்டில் இளம் பெண் பலாத்கார கொலை: துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்
கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கடந்த 24ம் தேதி கண்டறியப்பட்டது.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண் கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அந்தப் பெண் பயன்படுத்திய ஒரு ஜோடி செருப்புகள் கண்டறியப்பட்டது. 50 மீட்டர் தூரத்தில் அந்த பெண்ணின் நைட்டி கிடந்தது.
இந்த செருப்பு, நைட்டியை வைத்து அந்தப் பெண் யார் என போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் காணாமல் போன இளம் பெண்கள் மற்றும் வெளியூரில் இருந்து கோவையில் தங்கி வேலை செய்யும் இளம்பெண்கள் குறித்து தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
பெண்ணின் கையில் ஜெகன், ஜேஎஸ் என எழுதப்பட்டிருந்தது. இறந்த பெண்ணின் கழுத்து எலும்புகள் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பொருட்களால் தாக்கி கொலை செய்யப்பட்டாரா என உறுதி செய்ய முடியவில்லை.
| போலீசார் அறிவொளி நகர், அண்ணாநகர், மதுக்கரை மற்றும் சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை செய்தனர். சந்தேகத்தின் பேரில் 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. உடல் அழுகி போய் இருந்ததால் கற்பழிப்பு தொடர்பாக ஆதாரம் பெற முடியவில்லை. கொலை, கற்பழிப்பு தொடர்பாக மருத்துவ அறிக்கையை பெற போலீசார் காத்திருக்கின்றனர்.
3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியும் தகவல் கிடைக்கவில்லை. வடமாநில பெண்ணாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் பல்வேறு இடங்களில் இறந்த பெண்ணின் காது பகுதியில் உள்ள போட்டோ, செருப்பு போன்றவற்றுடன் போஸ்டர் அடித்து விசாரித்தனர்.
ஆனால் போஸ்டரில் உள்ள செல்போன் எண்களுக்கு யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. சிசிடிஎன்எஸ் என்ற குற்றம் மற்றும் குற்ற பின்னணி வெப்சைட் மூலமாக இந்திய அளவில் காணாமல் போன பெண்ணின் போட்டோ வைத்து மேட்சிங் செய்து இறந்த பெண்ணை அடையாளம் காண முயற்சி எடுக்கப்பட்டது.
மாவட்ட அளவில் வடமாநிலங்களில் இருந்து கோவையில் தங்கி வேலை செய்யும் இளம்பெண் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. ஆள் அனுப்பும் ஏஜன்டுகள், தொழில் நிறுவனங்களில் இளம்பெண் மாயமான விவகாரம் குறித்து போலீசார் தகவல் கேட்டுள்ளனர். 3 நாள் கடந்தும் கொடூர கொலை, பலாத்கார வழக்கில் போலீசார் துப்பறிய முடியாமல் திணறி வருகின்றனர்.
