மகளிர் சுய உதவி குழுவினரிடம் மோசடி… !

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். இதில், கோவை விளாங்குறிச்சி ரோடு, சேரன் மாநகர் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், யசோதா என்பவர் தலைமையில் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

|அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சேரன் மாநகரை சேர்ந்த பெண் மற்றும் அவரது கணவர் மகளிர் சுய உதவிக்குழு மூலம் வங்கியில் ரூ.2 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறினார். மேலும், ரூ.2 லட்சம் கடனுக்கு ரூ.45 ஆயிரம் கமிஷன், மாத தவணை என ரூ.61 ஆயிரம் சட்டவிரோதமாக பெற்று கொண்டார். பின்னர், இது ஏமாற்று வேலை என்பது தெரியவந்தது.

இது குறித்து கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவத்தில் வங்கி அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

இக்கூட்டத்தில், கோவை மாவட்டம் காரமடை அடுத்த கோபனாரி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் அறியாமையை பயன்படுத்தி தனது குழந்தைகளின் படிப்பிற்காக கடன் தேவைப்படுவதாகவும், அதற்கு உதவி செய்யுமாறு கூறி மலைவாழ் மக்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை வைத்து வங்கிகளில் கடன் வாங்கி அதனை செலுத்தாமல் மழைவாழ் மக்களை கடன்காரர்களாக மாற்றிவிட்டதாகவும் அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறுகையில், “தங்கள் மக்கள் பலருக்கும் எழுத படிக்க தெரியாது. எனவே தங்களை பயன்படுத்தி அந்த பெண் எங்களது ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு ஆகியவற்றை வாங்கி பல்வேறு கடன்களை பெற்று அதனை செலுத்தாமல் எங்களை கடன்காரர்களாக மாற்றி விட்டார்.

இதனால், அந்த பைனான்ஸ் நிறுவனத்தினர் வங்கியினர் எங்களிடம் கடனை செலுத்துமாறு கூறி நாள்தோறும் வற்புறுத்தி வருகின்றனர். அந்த பெண்ணுக்கு இதையே தான் வேலை. பணம் மட்டும் அல்லாமல் சிலரிடம் நகைகளையும் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்து தற்போது வரை நடவடிக்கை இல்லை” என்றனர்.

மேலும், சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த சண்முகவடிவேல் என்பவர் அளித்த மனுவில், என்னுடன் சேர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2022ம் ஆண்டில் இருந்து 2026 வரை தம்பு, சோமசுந்தரம், இளங்கண்ணன் என்பவர்கள் நடத்தி வந்த குலுக்கல் சீட் குரூப்பில் இணைந்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் ஆகிய சீட்களில் பணம் செலுத்தினோம். சுமார் ரூ.5 கோடிக்கு மேல் பணம் செலுத்தினோம். இது நாள் வரை பணம் தரவில்லை. போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சம்பவம் குறித்து விசாரித்து பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *