யானை வழித்தடத்தில் ரிசார்ட்டுகள்: கலெக்டரிடம் புகார்

கோவையில் யானைகள் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் எனவும், ஆனைகட்டி பகுதியில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் மாவட்ட கலெக்டரிடம் பாமக-வினர் மனு அளித்தனர்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பாமக சார்பில் இன்று மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில் யானை-மனித மோதல் காரணமாக 232-க்கும் மேற்பட்ட யானைகளும், 150-க்கும் அதிகமான மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். பல்வேறு உயிரிழப்புகள் யானைகளின் இயற்கை வழித்தடங்களில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளால் நிகழ்ந்துள்ளது.

தற்போது, தமிழகத்தில் 12 யானை வழித்தடங்கள் உள்ளன. அவற்றில் கோவை மாவட்டத்தில் மட்டும் 5 முக்கிய யானை வழித்தடங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள வரைவு யானை வழித்தடத் திட்டத்தில் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், கோவையில் 9 வழித்தடங்கள் உள்ளன.

|இந்த யானைகளின் வாழ்விடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும். யானைகள் இயல்பாக இடம்பெயர்ந்து செல்லும் பாதைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித-யானை மோதல்களை தடுக்க அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மேற்கொண்டு, நிரந்தர தீர்வுகளை அரசு செயல்படுத்த வேண்டும்.

ஆனைகட்டி பகுதியில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள ரிசார்ட்டுகள் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *