மகன் இறப்புக்கு நீதி கேட்டு கலெக்டரிடம் தாய் கண்ணீர் மனு…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு தாய் மனு அளித்தார்.
பொள்ளாச்சி அருகே ஆழியார் வால்பாறை சாலையில் உள்ள அங்கலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர், தனது மகன் ராம்குமார் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டில் போலீசார் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கால் ஏற்பட்ட மனஉளைச்சலின் பின்னர் மகன் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். அவர் தனது மகனுடன் உள்ள புகைப்படத்துடன் வந்து மனு அளித்தார்.
இது குறித்து தாய் பாப்பாத்தி கூறுகையில், எனது மகனை பாலியல் வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பொதுமக்களின் கையெழுத்துகள், கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை பலமுறை காவல்துறையினரிடம் மற்றும் அதிகாரிகளிடம் வழங்கினேன்.
இருப்பினும், வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆறு மாதங்கள் எனது மகன் சிறையில் இருந்த நிலையில், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும், நீதிமன்ற நிபந்தனையின்படி ஆனைமலை மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வீடு திரும்பிய போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர், அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
|இந்த மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, பொய்யான புகார் அளித்தவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பல மாதங்களாக பல்வேறு அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்திற்கும் மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என் மகன் மரணத்திற்கு நீதி வேண்டும். அதற்காக தான் கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
