கல் குவாரிகளில் வெடி வைப்பதில் முறைகேடு…

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகள் அதிகமாக இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் சிலர், புதிதாக குவாரிகள் துவக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குவாரிகள் துவங்க ஏகப்பட்ட கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை, போலீசார் என பல்வேறு துறையினர் ஆய்வு நடத்தி பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி ஒப்புதல் பெற்ற பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது.

உரிய அரசு துறைகளின் தடையின்மை சான்று பெற்று தான் உரிமம் வழங்கவேண்டும். ஆனால் சிலர் உரிய அனுமதி பெறாமல், குவாரிக்கு என ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி கனிம பொருட்களை தோண்டி எடுப்பதாக புகார் வந்துள்ளது.

போல்டர் கற்கள், ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் போன்றவை விதிமுறை மீறி எடுப்பதாக தெரிகிறது, உரிய அளவை விட கூடுதலாக கனிம பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்லுதல், குவாரிக்கு அனுமதி தராத இடங்களில் வெடி வைத்து கற்களை எடுத்தல், உரிமம் பெறாத நபர்கள், வேறு நபர்களின் பெயரில் உள்ள குவாரிகளை அனுமதியற்ற நபர்கள் இயக்குதல், போலியான ஆவணங்களை பயன்படுத்தி கனிம பொருட்களை கடத்துதல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

லைசென்ஸ் இல்லாத பிளாஸ்டர்கள் மூலமாக கல் குவாரிகளில் வெடி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட அளவில், டெட்டனேட்டர், ஜெலட்டின் போன்றவற்றை கையாளும் திறன் உள்ள வெடி வைக்க அரசு சான்று பெற்றவர்கள் அரிதாக உள்ளனர். ஓரிரு நபர்கள் பல குவாரிகளில் வெடி வைப்பது போல் காட்டி வெடி வைக்கிறார்கள்.

பிளாஸ்டர் அல்லாத லைசென்ஸ் இல்லாத நபர்கள் வெடி வைப்பதால் பெரும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. விவசாய நிலங்கள், குடியிருப்பு, நிலம், நீர், காற்று மாசு ஏற்படுத்தும் வகையிலான பகுதிகளில் குவாரிகள் இயங்க அனுமதி கிடையாது. உரிய உரிமதாரர்கள் மட்டுமே குவாரிகளை இயக்க மேவண்டும்.

தொடர்பில்லாத வேறு நபர்கள் குவாரிகளை இயக்கி வருகிறார்கள். இல்லீகல் மைனிங் நடக்கிறது. ஒவர் லோடு, அனுமதியின்றி கனிம பொருட்கள் பதுக்கல் நடக்கிறதா எனவும் விசாரணை நடக்கிறது. செயல்பாடில்லாத குவாரிகளில் குப்பை, தடை செய்யப்பட்ட கழிவுகள் குவிப்பதாக தெரிகிறது. இது தொடர்பாகவும் ஆய்வு பணி நடக்கிறது.

கோவை மாவட்ட கனிம வளத்துறையினர் கூறுகையில், “செயல்பாட்டில் இருக்கும் குவாரிகள் தொடர்பாக டிரோன் சர்வே நடத்தப்பட்டது. செயல்பாட்டில் இல்லாத குவாரிகளின் டிரோன் சர்வே நடக்கவில்லை. இங்கே அத்துமீறல் உள்ளதா, தடை செய்யப்பட்ட பொருட்கள் குவிக்கப்படுகிறதா என வருவாய்த்துறையினர் உதவியுடன் ஆய்வு நடக்கிறது. விதிமுறை மீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

One thought on “கல் குவாரிகளில் வெடி வைப்பதில் முறைகேடு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *