டாஸ்மாக் சரக்கு ஒரிஜினலா… புதுசா வந்தாச்சு ஹலோகிராம் ஸ்டிக்கர்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களில் போலியை கண்டறியும் வகையிலான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.
மாநில அளவில் டாஸ்மாக் மதுபானங்களில் ஒட்டுவதற்கு புதிய ஒளிரும் தன்மை கொண்ட ஹாலோகிராம் ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. போலி மதுபானங்களை கண்டறிய உண்மையான மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ஸ்டிக்கர் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்காக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலால் துணை கமிஷனர் சாதனை குரல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கலால், டாஸ்மாக் அலுவலர்கள், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.
இதில் கடந்த காலங்களில் இருந்ததை போல் சாதாரண அரசு முத்திரை ஹாலோகிராம் இனி கிடையாது போலி மதுபானங்களை கண்டறிய ரகசிய குறியீடு, க்யூ ஆர் கோட், 9 இலக்கு ரகசிய எண், கலர் மாறும் பின்புலம் உள்ள டிஎன் என்ற ஆங்கில வார்த்தை, மதுபானம் கேடு தரும் என்ற மெட்டாலைடு ஆங்கில வார்த்தைகள், ஐஎம்எப்எல், பீர் என இரு வகையாக பிரித்து
அதிகாரியின் கையெழுத்து போன்றவை அந்த ஹாலோகிராமில் இடம் பெற்றிருக்கும். கடைகளில் மதுபான பாட்டில்களை இந்த ஹாலோகிராம் முத்திரை மீது வைத்து தான் ஸ்கேன் செய்வார்கள். அப்போது அந்த மதுபாட்டில் ஒரிஜினலாக இருந்தால் தான் அந்த ஸ்கேனிங் பதிவாகும். இல்லாவிட்டால் அது நிராகரிக்கப்படும்.
புதுவகையான இந்த முத்திரை மூலமாக மதுபானங்கள் போலியாக கள்ளத்தனமாக மதுபான கடைகளில், எப்எல் உரிமம் பெற்ற பார்களில் விற்பனை செய்வதை தடுக்க முடியும் என பயிற்சியின் போது தெரிவிக்கப்பட்டது. ஆய்வுக்கு அதிகாரிகள் செல்லும் போது இந்த ஹாலோகிராம் சீல் ஒரிஜினலாக இருக்கிறதா என சோதித்து பார்க்க வேண்டும்.
கடைகளில் இந்த முத்திரை ஸ்டிக்கரை போலி மதுபானங்களில் ஒட்டி வைத்து விற்க கூடாது. சீல் முறையாக பாட்டில்களில் இடம் பெறவேண்டும் என டாஸ்மாக் குடோன் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
