பெற்ற தாயை கடித்து குதறிய கொடூர மகன் கைது
கோவை ஆர்.எஸ்.புரம், அருணாச்சலம் ரோடு கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (45).
இவரது மகன் ஹரிபிரசாத் (22). கடந்த 29ம் தேதி காலை, ஜெயந்தி தனது மகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது, அங்கு வந்த ஹரிபிரசாத், தனது மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்யுமாறு தாயிடம் கேட்டுள்ளார். ஹரிபிரசாத் மூன்று வெவ்வேறு எண்களை பயன்படுத்தி வந்ததால், “எந்த எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்?” என்று ஜெயந்தி கேட்டுள்ளார்.
இதனால் ஹரிபிரசாத், தாயிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், ஆத்திரமடைந்த ஹரிபிரசாத், தாய் ஜெயந்தியின் இடது கையில் பயங்கரமாக கடித்து குதறினார். அத்துடன் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மகனின் தாக்குதலில் காயமடைந்த ஜெயந்தி, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஜெயந்தி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை கடித்த மகன் ஹரிபிரசாத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
